உக்ரைன்- ரஷியா அமைதி பேச்சுவார்த்தை
உலகம்

ரஷியா- உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?- அபுதாபியில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை தொடக்கம்..!

பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தற்போது அமெரிக்கா மத்தியஸ்தம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று தொடங்கியது.

ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அபுதாபியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா சார்பில் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் (டிரம்ப் மருமகன்) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

புதின் ஆலோசகர்

ரஷியா சார்பில் அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழுவும், உக்ரைன் சார்பில் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன.

உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்கள், போருக்குப் பிந்தைய நிலைமை, போர் நிறுத்தம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக உள்ளன.

ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்க மறுக்கிறது. அதேநேரத்தில், ரஷியா டான்பாஸ் உள்ளிட்ட பகுதிகள் தொடர்பாக தனது கோரிக்கைகளை முன்வைக்கிறது.

உக்ரைனுக்கு ராணுவ பாதுகாப்பு விவகாரம்

இதற்கிடையில், உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை மற்றும் ராணுவப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களிலும் முரண்பாடுகள் தொடர்கின்றன.

பல மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

SCROLL FOR NEXT