உலகம்

ஈரானின் கெஷ்ம் தீவு மீது புதிய தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா

தீவில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியதாக அரசுக்கு சொந்தமான ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியா முழுவதும் பதற்றத்தை அதிகரித்துள்ள, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான புது மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்கா செவ்வாயன்று ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானின் கெஷ்ம் தீவின் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவு முழுவதும் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ஆனால் குடியிருப்பு, வணிக அல்லது பொது உள்கட்டமைப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஈரானின் தெற்கு ஹார்மோஸ்கான் மாகாணத்தின் துணை மாகாண ஆளுநர் அஹ்மத் நஃபீசி, தீவில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியதாக அரசுக்கு சொந்தமான ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த சேதமும் இல்லை:

"கெஷ்ம் தீவில் உள்ள இடங்கள் மீதான அமெரிக்க தாக்குதலால் குடியிருப்பு, வணிக அல்லது உள்கட்டமைப்பு பகுதிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை," என்று நஃபிசி கூறினார்.

அவசரகால சேவைகளும் அரசு நிறுவனங்களும் முழு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், அந்த தீவில் இருந்து புகை மண்டலங்கள் எழுவது போல் தோன்றியது. நேற்று (செவ்வாய் கிழமை) மாலை அங்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு வெடி சத்தங்கள் கேட்டதாக ஐ.ஆர்.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

பதிலடி நடவடிக்கை:

பஹ்ரைனின் ஷேக் ஈசா விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் நிலையத்தை, போர் டிரோன்களை கொண்டு தாக்கியதாக ஈரான் உரிமை கோரிய சில மணிநேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ ஆளில்லா விமானங்கள் ஈரானிய வான்வெளியில் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைந்ததற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) விவரித்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் உள்ள ராணுவ சொத்துக்கள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது வாஷிங்டனும் தெஹ்ரானும் தொடர்ந்து தாக்குதல்களையும் குற்றச்சாட்டுகளையும் பரிமாறி வருவதால், பதற்றம் அதிகரிப்பதற்கான ஆபத்து வளர்ந்து வருவதை சமீபத்திய நிகழ்வுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

SCROLL FOR NEXT