அமெரிக்க ராணுவம் ஹார்முஸ் ஜலசந்தியில் எதிரி நாடுகளின் ட்ரோன் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளும் வகையில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் உயர் ஆற்றல் லேசர்களை தயரித்து ஹார்முஸ் ஜலசந்தியில் நிலை நிறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் எதிரி நாட்டு ராணுவத்தின் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வகையில், புதிய லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கி, அமெரிக்கா சோதனையில் ஈடுபடுபட்டு வருகிறது.
ஈரான் நாட்டிற்கு எதிராக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கப்பல்கள் மீது, ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக அமெரிக்கா விலை உயர்ந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு அதிகளவிலான போர் செலவு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில், அதிக திறனில் சிறப்பாக செயல்படும் லேசர்களை சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் ஜெனரேட்டர்கள் அல்லது பேட்டரிகளிலிருந்து ஆற்றலைப் பெற்று, அதை ஃபோட்டான்களாக மாற்றுகிறது.
பின்னர், அந்த ஃபோட்டான்கள் (ஒளித் துகள்கள்), இலக்கின் மேற்பரப்பை அது வெடிக்கும் வரை வெப்பப்படுத்தி ஒற்றைக் கற்றையாகக் குவிக்கின்றன.
அமெரிக்க ராணுவம் இந்த லேசர் தொழில்நுட்பத்தை, மெக்சிகன் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராகவும், மத்திய கிழக்கில் உள்ள பல போர்க் கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவை இன்னும் மனித இலக்குகள் மீது பயன்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டைரக்டட் எனர்ஜி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் நீஸ் கூறுகையில், “ட்ரோன்களின் சென்சார்களை செயலிழக்க செய்வதற்கோ அல்லது ட்ரோனையே வெடிக்கச் செய்வதற்கோ, எங்களால் அவற்றை மிகத் துல்லியமாகக் கண்காணித்து, நாம் விரும்பும் இடத்தில் துல்லியமாகக் குறிவைக்க முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸ்பாக்ஸ் கேம் கன்சோல் கன்ட்ரோலர்களை பயன்படுத்தி இந்த லேசர் தொழில்நுட்பத்தை இயக்கி வருகின்றனர்.
ஒரு எக்ஸ்பாக்ஸ் கட்டுப்பாட்டு கருவியால், ட்ரோன்களை தாக்கும் வேலைகளை செய்ய முடியும்போது, ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அமைப்பை ஏன் மீண்டும் புதிதாக உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவம் கருதுவதாக செய்தி வெளியாகியுள்ளது.