ஈரானில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு இலக்குகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திட்டமிட்டுள்ளதாகவும், வார இறுதி முழுவதும் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சி.பி.எஸ். நியூஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
சிபிஎஸ் மேற்கோள் காட்டிய தகவல்களின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த தாக்குதல்களுக்கு இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் போது, ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருக்கும் என்று சி.பி.எஸ். செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், திங்கட்கிழமை நிதி சந்தைகள் திறப்பதற்குள் இந்த தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
முன்னதாக அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும், தலையீடுகளும் நீடிக்கும் வரை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் நீரிணையை திறக்கமுடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்தது.
“அமெரிக்காவின் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஹார்மூஸ் நீரிணையை அமைதியான முறையில் இரு நாடுகளும் இணைந்து நிர்வகிக்கலாம் என்ற அண்டை நாடான ஓமனின் சமரச திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்தது.
மேலும் முன்பு இருந்ததைப்போல, அதாவது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்குவதற்கு முன்பு இருந்ததை போல, அனைவருக்கும் தடையற்ற சுதந்திரமான அணுகல் நிலைக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திரும்பாது என்று ஈரான் மீண்டும் தெரிவித்து இருக்கிறது.