அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து இரு நாடுகளும் மீண்டும் பயங்கரமான தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் உயர்மட்டக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சியால் அமெரிக்கா- ஈரான் இடையில் கடந்த மாதம் 60 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பின் சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் அமெரிக்கா- ஈரான் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பப்பட்டது.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
பின்னர் ஈரான் உடனான இடைக்கால போர் நிறுத்தம் முடிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்தது. அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கக் கூடிய ஈரானின் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. இதற்கிடையே இடைக்கால போர் நிறுத்தத்திற்கான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அறிவித்தது.
இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் தீவிரமான போர் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஈரான் உள்துறை அமைச்சர் மொமேனி தலைமையிலான ஈரானின் உயர்மட்டக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்த குழுவை பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி வரவேற்றார்.
இந்த குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
போரை நிறுத்த திரைக்குப் பின்னால் பாகிஸ்தான் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.