சுவிட்சர்லாந்தில் நேற்று தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தையின் போது வேன்ஸ் இந்த சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக்கில் நேற்று ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழு மற்றும் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் தலைமையிலான ஈரான் குழு கலந்துகொண்டது.
மத்தியஸ்த்தராக செயல்படும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் உடைய பேச்சு வைரலாகி வருகிறது. தனது வாழ்விலேயே முக்கியமான இருவரில் ஒருவர் இந்தியர் என்றும் மற்றொருரவர் பாகிஸ்தானியர் என்றும் வான்ஸ் குறிப்பிட்டார்.
அந்த இந்தியர் தன் மனைவி உஷா வான்ஸ் என்றும் பாகிஸ்தானியர், அந்நாட்டின் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் என்றும் வான்ஸ் குறிப்பிட்டார்.
கடந்த 3 மாதங்களாக போர் நிறுத்தம் தொடர்பாக வேறு யாரையும் விட அசிம் முனீரிடம் தான் தொடர்ச்சியாக பேசியதாக குறிப்பிட்ட வான்ஸ், "முனீர் ஒரு அற்புதமான ராணுவத் தலைவர் மட்டுமல்ல, ஒரு சிறந்த இராஜதந்திரியும் என்பதை நிரூபித்துள்ளார்.
அவரது இராஜதந்திர அறிவும் தலைமைத்துவத் திறன்களும் இல்லாமல், நான் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்" என்று பாராட்டினார்.
பல மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்க-ஈரான் சர்ச்சைக்கு இராஜதந்திர ரீதியான தீர்வு கிடைத்ததற்கு அமெரிக்கா நன்றியுள்ளதாக இருப்பதாக வேன்ஸ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாம் இணைந்து இன்னும் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதே நமக்கு முன்னால் உள்ள கேள்வி.
மத்திய கிழக்கில் உறவுகளை நம்மால் நிரந்தரமாக மாற்ற முடியுமா? அல்லது பழைய நிலைக்கே திரும்பிச் செல்ல வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.