உலகம்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணைகள் வீச்சு

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதறல்கள் விழுந்து தாக்கியதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.

அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் கடந்த ஒரு மாதமாக மோதல் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டன. நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

ஈரான் அரசின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை ஈரான் புதைக்க முயன்றதால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

இதற்கிடையே சிரிக் நகரின் குஹெஸ்டாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதறல்கள் விழுந்து தாக்கியதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது:-

குஹெஸ்டாக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் திருமணத்தை குடும்பங்கள் கொண்டாடிக கொண்டிருந்தபோது கொடூரமாகத் தாக்கப்பட்டது.

இந்தக் கொடூரத்தை இதற்கு முன்னர் நடந்த தொடர் அட்டூழியங்களில் இருந்து பிரிக்க முடியாது என்றார்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் சூளுரைத்தது. அதன்படி ஜோர்டானின் அகபா பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தின் மீது ஏவுகணை களை ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியது.

ஈரானிடமிருந்து வந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாகவும் 3 ஏவுகணைகள் மக்கள் வசிக்கும் மையங்களிலிருந்து வெகு தொலைவில் விழுந்ததாகவும் ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது.

அதேபோல் பக்ரைன், குவைத்தில் அமெரிக்க தளங்களும் குறிவைக்கப்பட்டன. பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் ஈரான் தாக்குதலை நடத்தியது.

மேலும், அமெரிக்க படைகளுக்கு மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுப்போம் என்ற ஈரான் உச்ச தலைவர் மொஜத்பா கமெனி தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்," ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ஏறக்குறைய முழுமையான அமெரிக்காவின் கட்டுப்பாடும், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாகச் சரிந்து கொண்டும் இருக்கும் நமது தற்போதைய நிலையை நான் மிகவும் விரும்புகிறேன்.

ஈரானிய மக்கள் எப்போது கிளர்ந்தெழுந்து போராடப் போகிறார்கள்? என்று தெரிவித்து உள்ளார்.