உலகம்

94 வயது முன்னாள் அதிபர் மீது கொலைக் குற்றச்சாட்டு - கியூபா மீது பிடியை இருக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவின் கடுமையான பொருளாதார மற்றும் எரிபொருள் தடைகளால் கியூபாவில் மின் தட்டுப்பாடும், உணவுப் பஞ்சமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கம்யூனிச நாடான கியூபாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறது.

இந்நிலையில் 1996-இல் 2 சிவிலியன் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கில் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவை அமெரிக்க அரசு, குற்றவாளி என குறிப்பிட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா - கியூபாவுக்கு இடையே பயணித்து கொண்டுருந்த இரண்டு சிவிலியன் விமானங்கள் கியூப ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் மூன்று அமெரிக்கர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்த சமயத்தில் கியூபாவின் படதுகாப்பு துறை அமைச்சராக ரவுல் காஸ்ட்ரோ இருந்தார். இதனால் அவர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் 30 வருடம் கழித்து அவரை அமெரிக்கா குறிவைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஐந்து கியூபா அதிகாரிகள் மீது அமெரிக்க ஃபெடரல் வழக்கறிஞர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் டோட் பிளான்ச் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ரவுல் காஸ்ட்ரோவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2006இல் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிறகு கியூபாவின் அதிபராக பொறுப்பேற்ற ரவுல் காஸ்ட்ரோ, 2018 வரை அந்த பதவியில் இருந்தார். தற்போது 94 வயதாகும் ரவுல் காஸ்ட்ரோ அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளபோதும் அந்நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார்.

அவரை குற்றவாளி என அறிவித்ததன் மூலம் கியூபா மீதான அழுத்தத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

மறுபுறம், இந்த நடவடிக்கை அரசியல் சூழ்ச்சி என்று கியூப அதிபர் மிகுவொல் டயஸ் கனெல் சாடியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா இதேபோன்று குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரைப் பிடிக்க ராணுவ நடவடிக்கை வரை சென்றது.

அதேபோன்றதொரு ராணுவ நடவடிக்கைக்கு கியூபாவிற்கு எதிராகவும் அமெரிக்கா வழிவகுக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான பொருளாதார மற்றும் எரிபொருள் தடைகளால் கியூபாவில் மின் தட்டுப்பாடும், உணவுப் பஞ்சமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த புதிய சட்ட நெருக்கடி வந்துள்ளது.

தற்சமயம் 95 வயதாகும் ரவுல் காஸ்ட்ரோ, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கியூபாவின் செல்வாக்கு மிக்க மனிதராக திகழ்கிறார்.