உலகம்

அமெரிக்க வான்வெளியில் தொடரும் நெருக்கடி: 3-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டபி 1980-களின் பழைய தொலைத்தொடர்பு ரூட்டர்களை நவீனமாக்கும் பணியை கூறினார்

அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாட்டில் தொடர்ந்து 3-வது நாளாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் தவிப்பு

இந்தத் தொடர் தாமதம் மற்றும் ரத்து நடவடிக்கைகளால், இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் முடங்கி உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவின் 22 பிராந்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ரேடார் மற்றும் ரேடியோ தகவல் தொடர்புத் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் புறப்படும் அனைத்து விமானங்களையும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைத்தது.

குளறுபடி

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க வான்வெளியில் ஏற்பட்ட மிக நீண்ட முழுமையான விமான போக்குவரத்து நிறுத்தம் இதுவாகும்.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், விமானங்கள் மற்றும் பணியாளர்களின் கால அட்டவணையில் ஏற்பட்ட குளறுபடிகள் 3-வது நாளாக நேற்றும் நீடித்தன.

விமானக் கண்காணிப்புத்தளமான 'பிளைட்அவேர்' வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நேற்று மட்டும் சுமார் 2,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 8,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சைபர் தாக்குதல் இல்லை

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டபி கூறும்போது, 1980-களின் பழமை தொலைத் தொடர்பு உபகரணங்கள் மற்றும் ரூட்டர்களை நவீன மயமாக்கும் பணியின்போது ஏற்பட்ட சுமை காரணமாகவே இந்தத் தொழில்நுட்பத்தடை ஏற்பட்டது.

இந்தத் தடங்கலுக்குப் பின்னால் சைபர் தாக்குதலோ அல்லது திட்டமிட்ட வேலையோ இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து இன்று முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT