அமெரிக்கா முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் நேற்று நள்ளிரவு திடீரென்று தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இது விமான நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் விமானங்களை வழிநடத்தும் 22 பிராந்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களை பாதித்தது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பறந்து கொண்டிருந்த விமானங்களை உடனடியாக தரையிறக்க உத்தரவிட்டது. அதேபோல் விமானங்கள் புறப்படவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன.
இதுதொடர்பாக அரசு விமான போக்குவரத்து நிர்வாகம் கூறும்போது,"வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தகவல் தொடர்புச் சிக்கல்கள் காரணமாக அமெரிக்காவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன.
இது தற்காலிக தொலைத்தொடர்பு முடக்கம்தான். இந்த கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களும் தரையிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.
அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டதால் அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. 4 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
விமான சேவைகள் முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 15 லட்சம் பேர் தங்களது பயணத்தை தொடர முடியாமல் தவித்தனர். அவர்கள் விமான நிலையங்களில் காத்து கிடந்தனர். தாங்கள் பயணிக்கும் விமானங்கள் இயக்கப்படுமா, இல்லையா என்பதில் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையே உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க்வெய்ன் முல்லின் கூறும்போது,"அமெரிக்காவிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. இது இரட்டை கோபுர தாக்குதல் போன்றதொரு நிகழ்வு அல்ல.
தீய நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. சைபர் தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. தற்போதைய நிலவரப்படி இது ஒரு தொலைத்தொடர்பு முடக்கம் மட்டுமே"என்றார்.
இதற்கிடையே சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நாடு தழுவிய விமான போக்குவரத்து நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து விமான சேவைகள் மெல்ல மெல்ல தொடங்கப்பட்டன.
ஆனால் சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப சில காலம் ஆகும் என அமெரிக்கப் போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்க உத்தரவிட்டது.
2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முக்கிய கணினி அமைப்பில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. தற்போது மீண்டும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.