அமெரிக்க தேர்தல் அமைப்பில் சீனா தலையிட்டு 22 கோடி வாக்காளர்களின் தரவுகளைத் திருடியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றார். அப்போது தேர்தலில் முறைகேடு நடந்ததாக தோல்வியை தழுவிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிவுக்கு பின்னர், தனது ஆதரவாளர்களை வைத்து அதிபர் மாளிகையை முற்றுகையிட செய்தார். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதன்பின்னர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் தரப்பு நீதிமன்றங்களில் பல வழக்குகளை போட்டது. ஆனால் எதற்கும் போதிய ஆதாரம் இல்லை என அவரின் கட்சியில் இருந்தே குரல்கள் வந்தன.
இந்த சர்ச்சை அடங்காமல் புகைந்துகொண்டே இருந்தது. இதனிடையே 2024 தேர்தலில் 2 கொலை முயற்சிகளில் இருந்து தப்பி, உலகபெரும்பபணக்காரார் எலான் மஸ்கின் ஏகபோக ஆதரவு மற்றும் அளவற்ற நிதியின்மூலம் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.
இதன் பின்னர் தற்போது புகைந்துகொண்டிருந்த 2020 தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை டிரம்ப் ஊதிப் பற்ற வைத்துள்ளார். ஈரான் போர் நஷ்டங்களால் உள்நாட்டில் சொந்த கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் டிரம்ப் செல்வாக்கை இழந்து வருவதை சர்வேக்கள் காட்டி வருகின்ற இந்த சூழலில் டிரம்ப் தன் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளார்.
இன்று வெள்ளை மாளிகையில் இருந்தபடி டிரம்ப் நாட்டு மக்களுக்கு 24 நிமிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்க தேர்தல் அமைப்பில் ஊடுருவி 22 கோடி வாக்காளர்களின் தரவுகளை திருடி வைத்துள்ளதாவும் இது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தல் தரவுத் திருட்டு என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தரவு கசிவு அமெரிக்க தேர்தல் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சீனாவின் இந்தத் தரவு மோசடியை மூடிமறைக்க, அப்போதைய அரசின் சில உறுப்பினர்கள் முயன்றனர்.
இப்போதும் நமது நாட்டின் தேர்தல் அமைப்பு வெளிப்படைத்தன்மையற்றதாகவும் துல்லியமற்றதாகவும் உள்ளது.
ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களின் வாக்கு சரியான முறையில் சென்று சேர்கிறது என்ற நம்பிக்கையை பெற வேண்டும். ஆனால் இன்றைய தேர்தல் அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஹேக்கிங் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு ஆபத்தான அளவுக்கு உள்ளது.
மோசடி மற்றும் தலையீடுகள் இல்லாத ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது." என தெரிவித்தார்.
இதற்கு தீர்வாக அமெரிக்க வாக்காளர் தகுதிப் பாதுகாப்புச் சட்டத்தை (SAVE சட்டம்) நிறைவேற்றுமாறு காங்கிரஸை அவர் வலியுறுத்தினார்.
இந்தச் SAVE சட்டத்தின் கீழ், வாக்களிக்கப் பதிவு செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் இந்த விதிமுறையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயம் உள்ளதென மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இன்றைய தனது உரையை ஒளிபரப்பாத ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிரம்ப் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார்.
தனது உரையை நேரலையில் ஒளிபரப்ப மறுத்த ஏபிசி மற்றும் என்பிசி போன்ற ஊடகங்களின் உரிமங்களை ரத்து செய்வேன் எனவும் அந்த ஊடகங்கள் தேர்தலில் முறைகேடு செய்யும் சதித்திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
டிரம்ப் குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு சாங் பேசுகையில், "அமெரிக்கத் தேர்தல்கள் அவர்களின் சொந்த விவகாரம். அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் அதன் முடிவை தீர்மானிப்பார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை, இனியும் அவ்வாறு செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.