ஈரானின் அனைத்து நிதி மற்றும் பொருளாதார வழிகளையும் ஒட்டுமொத்தமாக துண்டிக்கும் கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ளதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடியும் தருவாய்க்கு வந்துள்ளது என்றும் இனி அதன் மீது பொருளாதார போர் தொடக்கப்படும் என்ற அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் ஸ்காட் பெசென்ட்டின் அறிவிப்பு வந்துள்ளது.
ஈரான் மற்றும் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் இன்று அதிகாலை ஸ்காட் பெசென்ட் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
"அதிபர் டிரம்ப், ஈரானின் ராணுவத் திறன்களை சிதைத்து, அதன் ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அழித்து, அதன் அணுசக்தித் திட்டத்தையும் புதைத்துவிட்டார்.
நாம் இப்போது இறுதிக்கட்டத்தை (Endgame-ஐ) நெருங்கிக்கொண்டிருக்கிறோம். விடியற்காலையில் ஒரு பொருளாதாரப் பேரழிவு நாள் (Economic D day) தொடங்குகிறது.
இது ஒரு எதிரிக்கு எதிராக இதுவரை தொடுக்கப்படத்திலேயே மிகப்பெரிய பொருளாதார தாக்குதலாகும்.
மிரட்டிப் பணம் பறிப்பதைப் பாதுகாப்பு உத்தரவாதங்களாக காட்டி ஈரான் தப்பி பிழைத்து வந்தது. அமெரிக்கா வெறும் பேச்சுவார்த்தை தான் நடத்தும் என்று கணக்கிட்டதால் அவர்கள் இந்த தைரியத்தை பெற்றனர்.
அதிபர் டிரம்பின் கீழ், அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. தெஹ்ரானை எதிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்கு அஞ்சுபவர்கள், வாஷிங்டனை சோதிப்பதனால் பெரிய விலை கொடுக்க நேரிடும்.
நாம் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று பலர் கருதிய ஒவ்வொரு முகமையையும், ஒவ்வொரு அதிகாரத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் நிலைமைகளை அதிபர் உருவாக்கியுள்ளார்.
தெஹ்ரான் தனித்து நிற்கும் வரை, அந்த கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே நமது நோக்கம்." என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தப் பொருளாதார முற்றுகைக்கு ஆதரவளிக்கும் அல்லது பங்கெடுக்கும் எந்தவொரு நாட்டையும் ஈரான் எதிரி நாடாகவும், அது ஈரானுக்கு எதிரான நேரடிப் போராகவும் கருதப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என எச்சரித்துள்ளார்.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபப், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இறுதியில் அமெரிக்காவையே பூமரங் போல திருப்பித் தாக்கும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாஹே, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கத் தடைகளை சந்தித்து வரும் ஈரானுக்கு இது புதியதல்ல என்றும், இந்த நடவடிக்கை தோல்வியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.