அணு ஆயுத போட்டி காரணமாக தொடங்கிய ஈரான் போர் ஒவ்வொரு நாளும் புது பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளால் மத்திய கிழக்கில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன.
இந்த வரிசையில், ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடும் நோக்கில், பத்துக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் பல விமானங்களின் ஆதரவுடன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க மாலுமிகள், கடற்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்கள் மீது கடற்படை முற்றுகையை அமல்படுத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்-CentCom) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்க-ஈரான் மோதலில் பதற்றம் தொடர்ந்து அதிரித்துள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்த நடவடிக்கையின் முதல் 24 மணி நேரத்தில், “அமெரிக்க முற்றுகையை தாண்டி எந்தக் கப்பலும் செல்லவில்லை” என்றும், ஆறு வர்த்தக கப்பல்கள் அமெரிக்க படைகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கித் திரும்பி, ஓமான் வளைகுடாவில் உள்ள ஒரு ஈரானியத் துறைமுகத்திற்குள் மீண்டும் நுழைந்தன என்றும் சென்ட்காம் கூறியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடாவில் உள்ள வசதிகள் உட்பட, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதிகளுக்குள் நுழைய அல்லது வெளியேற விரும்பும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த முற்றுகை பொருந்தும்.
இந்த நடவடிக்கை “பாரபட்சமின்றி” செயல்படுத்தப்படுவதாக சென்ட்காம் கூறியதுடன், ஈரான் அல்லாத துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களின் சுதந்திரமான கடல்வழி போக்குவரத்திற்கு அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அது மேலும் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின் அளவை விவரிக்கும் ஒரு வரைபடத்தையும் அந்தப் படைப்பிரிவு வெளியிட்டது. இந்த பணியில் 10,000-க்கும் மேற்பட்ட படை வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட போர் மற்றும் கண்காணிப்பு விமானங்கள், மற்றும் குறைந்தது 12 போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக அது கூறியது.
இதில் விமானம் தாங்கி கப்பல், நீர்நிலத் தாக்குதல் கப்பல், நீர்நிலப் போக்குவரத்து கப்பல், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள், கடலோர போர் கப்பல்கள், தரை மற்றும் கடல் சார்ந்த போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள், மற்றும் உளவு, கண்காணிப்பு மற்றும் புலனாய்வு விமானங்கள் ஆகியவை அடங்கும்.