அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூன் 30-ந்தேதி ரத்து செய்தது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த டிரம்ப் 2 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோருபவர்களை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிறப்புச் சுற்றுலாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டினரின் 600-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்து உள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
வெளியுறவுத்துறையால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’வின் ஆய்வைத் தொடர்ந்து இந்த விசா ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மார்கோ ரூபியோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
வெறும் ஒரு மாதத்தில், பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டினரின் 600-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் துஷ்பிரயோகத்திலிருந்து நமது நாட்டைப் பாதுகாக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அமெரிக்கக் குடியுரிமை விற்பனைக்குரியது அல்ல என்றார்.
மேலும் அமெரிக்கச் சட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பிறப்புச் சுற்றுலா மூலம் பெரும் லாபம் ஈட்ட சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
வெளிநாட்டினர் தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், அமெரிக்க விசா நடைமுறையை ஏமாற்ற அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்வது, ஏன் போலி ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற செயல்களில் இக்கும்பல்கள் ஈடுபடுகின்றன என்று மார்கோ ரூபியோ குற்றம்சாட்டி உள்ளார்.