விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force) தெரிவித்துள்ளது. முதன்முறையாக இதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
விரோதப் போக்குடைய எதிரிகளிடமிருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட (on-orbit) ஆயுதம் அவசியம் என்று அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய் மெய்ங்க் கூறினார். சீனா மற்றும் ரஷியாவிற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் அமெரிக்கா ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
மேரிலேண்டில் உள்ள நேஷனல் ஹார்பரில் நடைபெற்ற வருடாந்திர வான், விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மெய்ங்க், விண்வெளியில் உள்ள அமெரிக்க ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக விண்வெளிக் கட்டுப்பாட்டிற்காக அது பயன்படுத்தப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக, டிரம்ப் நிர்வாகம் தனது கோல்டன் டோம் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கு விண்வெளித் திறன்களை அவசரமாக உருவாக்கி வரும் வேளையில் மெய்ங்கின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளியை ராணுவமயமாக்குவது என்பது விண்வெளிப் பந்தயத்தைப் போலவே பழமையானது. 1957-ல் ஸ்புட்னிக் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட உடனேயே, வாஷிங்டனும் மாஸ்கோவும் செயற்கைக்கோள்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கும் அவற்றை அழிப்பதற்குமான வழிகளை ஆராயத் தொடங்கின.
ஒரு காலத்தில், விண்வெளியில் உள்ள அணு ஆயுதங்களைப் பற்றியதே மிகப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால் வல்லரசுகளும் பிற நாடுகளும் 1967-ல் புற விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சுற்றுப்பாதையில் பேரழிவு ஆயுதங்களைத் தடை செய்தன.
அப்போதிருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ராணுவத் தகவல் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்கு முக்கியமாக விளங்கும் போட்டியாளர்களின் செயற்கைக்கோள்களைக் குறிவைக்கும் வழிகள் போன்ற, ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட திறன்களை உருவாக்க முயற்சித்து வருகின்றன.