அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், வர்த்தக அளவிலான தடை நீக்கத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக அளவிலான சமாதானம் மற்றும் பொருளாதார நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ‘புசான் ஒப்பந்தம்’ கடந்த காலத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நவம்பர் 10, 2026 அன்று காலாவதியாகும் வகையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிகளுக்கு 10 சதவீதம் வரி குறைப்பை அமல்படுத்தியது.
இதையடுத்து அமெரிக்க விவசாய பொருட்களைபெருமளவில் கொள்முதல் செய்ய சீனா ஒப்புக்கொண்டது.
மேலும் அரிய வகை கனிமங்கள் மீதான புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தற்காலிகமாக ஒத்திவைக்கவும் சீனா ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். இதையடுத்து அமெரிக்கா கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணை பிரதமர் ஹே பிஃபெங் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் கூறுகையில், புசான் ஒப்பந்தம் ஜனவரி 10, 2027 வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் புசான் ஒப்பந்தத்தின் கீழ், அரிய வகை உலோகத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாக சீனா உறுதியளித்திருந்த நிலையில், அவை முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதையடுத்து தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசம், சீனாவின் ஏற்றுமதியை மதிப்பிடுவதற்கு உதவும் என அவர் கூறினார்.
சீனா மற்றும் அமெரிக்கா இடையே முன்னதாக கையெழுத்தான ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) குறித்த உரையாடலை மீண்டும் தொடங்கும் வகையில் புசான் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.