உலகம்

பழமையான கட்டமைப்பே விமான சேவை முடங்கியதற்கு காரணம்- அமெரிக்க அமைச்சர் சீன் டபி

பழமையான அமைப்புகளை முழுமையாக மாற்றுவதற்குத் தேவையான நிதியை அமெரிக்க பாராளுமன்றம் வழங்கவில்லை.

விமான சேவைகள் முடக்கம் குறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் சீன் டபி கூறியதாவது:-

இந்த விமான சேவைகள் முடக்கத்திற்கு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள மிகவும் பழமையான கட்டமைப்புதான் காரணம்.

பழைய அமைப்புகள் அதிகப்படியான தரவுகளால் சுமைக்குள்ளாகின. சுவிட்சுகள் மற்றும் ரவுட்டர்களில் தரவுச் சுமை அதிகரித்து அவை முரண்பாடான அல்லது தவறான தரவுகளை வழங்கத் தொடங்கின.

இதன்காரணமாகவே நாங்கள் அந்த அமைப்பைச் செயலிழக்கச் செய்தோம். மேலும் தொலைத்தொடர்பு மற்றும் ரேடார் சேவைகளில் அடிக்கடி தடங்கல்கள் ஏற்பட்டன.

பழமையான அமைப்புகளை முழுமையாக மாற்றுவதற்குத் தேவையான நிதியை அமெரிக்க பாராளுமன்றம் வழங்கவில்லை. இதற்கான நிதியை அதிபர் டிரம்ப் கோரி உள்ளார்.

நவீன வசதிகளுடன் கூடிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க எங்களுக்குத் தேவையான வளங்களை வழங்குங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக முக்கியமான இந்த அமைப்பிற்கு தற்காலிகமான அல்லது அரைகுறையான தீர்வுகளை மட்டும் வழங்காதீர்கள்.

இது குடியரசுக் கட்சியினருக்கோ அல்லது ஜனநாயகக் கட்சியினருக்கோ உரியது அல்ல. இது ஒட்டுமொத்த அமெரிக்காவிற்கு உரியது. இதைச் சரிசெய்யத் தேவையான நிதியை எங்களுக்கு வழங்குங்கள். வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்தாவிட்டால் விமானப் பயணங்களில் மேலும் பல இடையூறுகள் ஏற்படக்கூடும்.

இதே நிகழ்வு மீண்டும் நடக்குமா என்பதை சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் இத்தகைய சூழல் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT