ஹார்முஸ் ஜலசந்தி
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி எங்களது கட்டுப்பாட்டில்.., அடித்துக் கொள்ளும் அமெரிக்கா- ஈரான்..!

கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் போக்குவரத்தை நிர்வகிக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்கிறது ஈரான்.

அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஈரான் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் உடன் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார்.

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்

இதனால் கோபம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகள் (மேற்காசிய பிராந்தியம்) மீது தாக்குதல் நடத்தியது. இதில் துபாய், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகள் சேதமடைந்தன. பின்னர் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஈரானும் அதற்கு ஒப்புக் கொண்டன.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டின்போது 60 நாட்கள் இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து மேற்காசிய நாடுகளில் நிலவிய பதற்றம் கடந்த மாதம் (ஜூன் 12) தணிந்தது.

பின்னர் சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் அளவிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. போர் பதற்றம் தணிந்ததால் அயதுல்லா கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில்தான் கடந்த 8-ந்தேதி ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதுடன் போர் நிறுத்தம் முடிந்தது என்று அறிவித்தார்.

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்

இதற்கிடையே நேற்று காலை வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமானார். இது அமெரிக்காவை கடுங்கோபத்திற்கு உள்ளாக்கியது. ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தியது. 25-க்கும் மேற்பட்ட நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளது. அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தது. இதன் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது யார்?

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எளிதாக சென்று வர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதேவேளையில் சுங்க கட்டணம் செலுத்தினால்தான் கப்பல்களை அனுமதிப்போம் என்று ஈரான் சொல்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என ஈரான் தெரிவித்து்ளளது. இது தொடர்பாக ஈரான் "கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் போக்குவரத்தை நிர்வகிக்கவும், அதற்கான கட்டணங்களை வசூலிக்கவும் உரிமை உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

ஆனால், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் குறித்த சர்வதேச சட்டங்களை சுட்டிக்காட்டி அமெரிக்காவும் பிற நாடுகளும் இதனை மறுக்கின்றன. அத்துடன், ஈரானின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்று பாதையொன்றை உருவாக்கவும் அமெரிக்க ராணுவம் முயன்றுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் "நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு வருகிறோம். அனைத்து விஷயங்களிலும் உடன்பாடு எட்டப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். எனினும், பின்னர் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்புகொண்டு சில மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து விரிவாக அவர் தெரிவிக்கவில்லை.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே போட்டி நிலவுகிறது. ஈரான் இந்த விசயத்தில் விட்டுக்கொடுக்குமா? என்பது தெரியவில்லை. அதேவேளையில் உலக நாடுகளின் வர்த்தக கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்று வர வேண்டுமென்றால் அதனை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் அமெரிக்கா நினைக்கிறது.

இவர்கள் மோதலால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார நிலை சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.