கோப்புப் படம்  
உலகம்

ஹார்முஸ் அருகே பதற்றம்.. தெற்கு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் - தோஹா பேச்சுவார்த்தையில் தொய்வு

தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ், ஒரு முக்கிய ஈரானிய கடற்படை மற்றும் விமானப்படைத் தளமாக உள்ளது.

அமெரிக்கா இஸ்ரேல் இடையே கடந்த 3 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் 2 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

ஹார்முஸ் மீதான கட்டுப்பாடு, அணுஆயுதத்திற்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது ஆகியவற்றில் இரு நாடுகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

கத்தார் நாட்டின் தோஹா நகரில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரு நாடுகள் இடையே ஏற்கனவே எட்டப்பட்ட 60 நாள் தற்காலிக போர் நிறுத்தம் விரைவில் முடிவடைய உள்ளது.

இந்த சூழலில் ஈரானின் தெற்கு பகுதியில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்க முயன்ற படகுகளை குறிவைத்து அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள தெற்கு துறைமுக நகரமும் ஈரானிய கடற்படை தளமுமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதல்கள் தற்காப்புக்காகவும், ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்க வீரர்களை பாதுகாப்பதற்காகவும் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் நால்வர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கூற்றுப்படி, பந்தர் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல் நடந்தவுடன் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ், ஒரு முக்கிய ஈரானிய கடற்படை மற்றும் விமானப்படைத் தளமாக இருப்பதுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் அருகே அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும்.

அங்கு அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல் தோஹாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் மேலும் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.