உலகம்

ஜெர்மனியில் நடந்த நிகழ்வில் அபிஜித் தீப்கே குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

100 இந்திய தொழிலதிபர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் உடன் சென்றுள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ஜெர்மனியில் இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடியபோது சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குறித்து பேசியுள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் அபிஜித் தீப்கே தொடங்கிய இணைய இயக்கம் இளைஞர்களின் ஆதரவை பெற்று பின்னர் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான கள செயல்பாடுகளில் இறங்கியது. கடந்த ஜூன், ஜூலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த சிஜேபி போராட்டதால் தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இதனிடையே இந்த மாதம் காந்தி ஜெயந்தி முதல் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும் அதற்கு துணை நின்றதாக தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கோரியும் சிஜேபி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

ஆனால் இந்த முறை போராட்டம் நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரை டெல்லி காவல்துறை கைது செய்தது. ஜந்தர் மந்தர் இனி போராட்ட களம் இல்லை என அறிவித்தது. அடுத்தகட்ட போராட்டங்களுக்கும் அனுமதி மறுத்து வருகிறது. தீப்கே மற்றும் பிற நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பியூஷ் கோயல்

இந்த சூழலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அக்டோபர் 22 முதல் 27 வரை ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுமார் 100 இந்திய தொழிலதிபர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் உடன் சென்றுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள திறமை வாய்ந்த இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு ஈர்ப்பதற்காக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள இந்தியாவை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுடன் கோயல் கலந்துரையாடினார்.

தீப்கே குறித்து பேச்சு

அப்போது பேசிய அவர், "திறமைமிக்க இந்தியர்கள் உலகின் எல்லா இடங்களிலும் தென்படுகிறார்கள். அவர்களை மீண்டும் எப்படி ஈர்ப்பது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இருப்பினும், இந்த செயல்பாட்டில் நிதியை தவறாகப் பயன்படுத்தாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். சீனாவில் முறைகேடுகள் நடந்தால், ஆட்கள் காணாமல் போவார்கள். அதே போல் நம் நாட்டிலும் நடந்தால், நானே ஒரு அமைச்சராகக் காணாமல் போய்விடுவேன்" என்றார்.

சீன பாணி திட்டங்கள் இந்தியாவிலும் செயல்படுத்தப்படுமா? ஒரு மாணவரின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது, "அது ஒரு நல்ல யோசனைதான், ஆனால் சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உள்ள வேறுபாடு அங்குதான் உள்ளது. நாம் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினால், மாணவர்களுக்கு நிதி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு" என்று கூறினார்.

இதன்போது, "அபிஜித் தீப்கே போன்றவர்கள் விமர்சித்து, மனதைக் கெடுத்துவிடுவார்கள். அதனால்தான் நமது ஜனநாயக அமைப்புக்கு ஏற்ப நாம் கொள்கைகளை வகுக்க வேண்டும்." என்று பியூஸ் கோயல் தெரிவித்தார்.

நாடு திரும்புங்கள்

தொடர்நது கோயல் இந்திய மாணவர்களை நோக்கி, "உங்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவோம் என நம்புகிறோம். இது வெறும் நிதிப் பலன்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இது உங்கள் தாய்நாடு.

உங்கள் வாழ்வில் சிறிது நேரத்தை நாட்டிற்காக அர்ப்பணியுங்கள்," என்று வலியுறுத்தினார்.

தனது பயணத்தின் ஒரு பகுதியாக 'பெர்லின் உலகளாவிய உரையாடல் 2026' மாநாட்டில் பங்கேற்ற கோயல், பருவநிலை மாற்றம் தொடர்பான பொறுப்பை வளர்ந்த நாடுகள் உணர வென்றும் என்றார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த அபிஜித் தீப்கேவும் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலையில் படித்துக்கொண்டிருந்தபோது ஜூன் மாதம் இந்தியா திரும்பி தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT