அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மொத்தம் உள்ள அனைத்து 193 உறுப்பு நாடுகளும் கலந்துகொண்டன. ‘அமைதி மற்றும் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் ஒற்றுமை’ ஆகிய கருப்பொருளின் கீழ் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் தூதுக்குழு உறுப்பினர், “இந்தியாவில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டு வருகிறது” என்று ஐ.நா.வில் குற்றம்சாட்டினார்.
இதற்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி கண்டனம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “முற்றிலும் இந்தியாவிற்கான விஷயமான ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து பாகிஸ்தான் தேவையற்ற முறையில் குறிப்பிட்டிருப்பது என்னை பதிலளிக்க நிர்பந்தித்தது.
பாகிஸ்தான் தங்களின் பிளவுபடுத்தும் அரசியல் நலன்களுக்காக மதிப்புமிக்க ஐ.நா தளங்களை தங்களின் வழக்கமான பாணியில் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து இந்த மன்றத்தையும் விட்டுவைக்கவில்லை.
பாதுகாப்புக் குழுவில் தனது இருப்பை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துவதும் பல தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்களைப் பரப்புவதும், இந்த எதிர்மறையான அணுகுமுறைக்குச் சான்றாக அமைகிறது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கமுடியாத பகுதியாக இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும். இதற்கு மாறான எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றது, வரலாற்று உண்மைகளிலிருந்து விலகியது மற்றும் அவற்றுடன் பொருந்தாதது” என்று கூறினார்.