உலகம்

மார்ச் மாதத்தில் மட்டும் 33 ஆயிரம் ரஷிய டிரோன்களை வீழ்த்தியுள்ளோம்: உக்ரைன்

ரஷியாவால் ஏவப்பட்ட டிரோன்களில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவையை தடுத்து அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

4 வருடத்திற்கு மேலான நீடிக்கும் ரஷியாவுக்கு எதிரான போரில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மார்ச் மாதம் 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளார்.

ரஷியா- உக்ரைன் இடையிலான போர் கடந்த 4 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது வான்தாக்குதல் மூலம் இருநாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. ஒன்றிரண்டு டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தாது. ஒருமுறை தாக்குதல் நடத்த முடிவு எடுத்துவிட்டால் அலைஅலையாய் தாக்குதல் நடத்தும்.

ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரிப்பதை உக்ரைன் அதிகரித்துள்ளது. ரஷியாவின் நெடுந்தூர எல்லையை தாண்டி தாக்கும் வகையில் ஆயுதங்களை தயாரித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேவேளையில் ரஷியாவின் தாக்குதலையும் முறியடிக்கும் வகையில் வான்பாதுகாப்பு சிஸ்டத்தையும் மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து ஒரு மாதத்தில் அதிக டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்த மாத தொடக்கத்தில் கருங்கடலில் உள்ள ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதில் 24 எண்ணெய் சேமிப்பு கிடங்கு அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.