ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்
உலகம்

ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷியாவுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் பேச்சுவார்தைக்கு வர அழுத்தம் கொடுப்பது அவசியம் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 4 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய காலத்தில் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் பின்வாங்கியது. பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் ரஷியப் படைகளை எதிர்கொண்டது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் மூலம் தாக்குதல்

தற்போது ரஷியாவின் டிரோன்களை எதிர்த்து அழிப்பது, ரஷியாவின் இலக்குகளை துல்லியமாக தாக்குவது ஆகியவற்றிற்காக உள்நாட்டிலேயே ஆயுதம் தயாரித்துள்ளது உக்ரைன். இந்த ஆயுதங்களால் ரஷியாவில், உக்ரைனில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள பொருளாதாரத்திற்கு முக்கியமான கட்டமைப்புகள், ராணுவத் தளங்கள் போன்றவை மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

வாஷிங்டனில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஷியாவுக்கு எதிரான போரில் இன்னும் அதிக அளவில் உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையம் மீது தாக்குதல்

இந்த நிலையில் இன்று ரஷியாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த நிலையம் வருடத்திற்கு 17 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டதாகும். இது உக்ரைனில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

ரஷியாவில் உள்ள ரியாசன் கவர்னர் பவேல் மால்கோவ், டிரோன் தாக்குதலுக்குப் பிறகு 6 பேர் காயத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிரோன் பாகங்கள் காரணமாக அடையாளம் காணப்படாத தொழில்துறை இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது என்றார்.

டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து ஜெலன்ஸ்கி

இந்தப் போரின் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு அதிக விலையை கொடுக்க வைக்கும் என்பதை ரஷியா உணர வேண்டும். ஆக்கிரமிப்பாளரை வலுவிழக்கச் செய்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதை விரைவுபடுத்தும் வகையில் தொடர்ந்து அழுத்தத்தை கொடுப்பது அவசியம் என ஜெலன்ஸ்கி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் உடனான சந்தித்து, சிறந்தவை என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஏராளமான விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக உக்ரைன் துறைமுகங்களில் இருந்து புறப்படும், வரும் கப்பல்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.