உக்ரைன் மன்னிப்பு கோர வேண்டும் என தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.
தென் கொரியாவிடம் வட கொரிய கைதிகள் 2 பேரை உக்ரைன் ஒப்படைத்துள்ளது.
அதை ரகசியமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் அமெரிக்காவில் நடந்த ஐநா பொது சபை கூட்டத்தில் அதை பகிரங்கமாக அறிவித்ததை தொடர்ந்து தென் கொரியா அதிருப்தி அடைந்துள்ளது. உக்ரைன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தென் கொரியா கோரியுள்ளது.
"இரகசியக் காப்பு ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தன்னிச்சையாக தகவல்களை வெளியிட்டதையும், பின்னர் அத்தகைய இரகசியக் காப்பு ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று அது பொய்யாகக் கூறியதையும் அதிபர் அலுவலகம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தென் கொரியாவின் மக்கள் தொடர்புச் செயலாளர் சோங் கி ஹாங் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தேவைப்பட்டால், இவ்விவகாரத்தில் மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு உள்ளிட்ட இராஜதந்திர மற்றும் மனிதாபிமானக் காரணங்களுக்காக, இந்தப் பரிமாற்றத்தை ரகசியமாக வைத்திருக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய நாடுகள் பொது சபையில் ஆற்றிய தனது உரையின் போது, முன் ஆலோசனைகள் இன்றி இந்த இடமாற்றத்தைப் பகிரங்கப்படுத்தினார் என்று சாங் குற்றம்சாட்டினார்.
மேலும், அப்படிப்பட்ட எந்த இரகசிய உடன்பாடும் இருந்ததை உக்ரைன் பின்னர் மறுத்தது. இந்தச் செயல் இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது என்றும், இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் என்றும் சாங் எச்சரித்தார்.
இரண்டு வட கொரியப் போர்க் கைதிகளை தென் கொரியாவிடம் ஒப்படைத்ததை உக்ரைன் பகிரங்கமாக வெளியிட்டதற்கும், இது தொடர்பாக ஒப்பந்த மீறல் எதுவும் இல்லை எனப் பொய்யாக மறுத்ததற்கும் அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் மன்னிப்பையும் தென் கொரியா கோரியுள்ளது.
இருப்பினும், தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள உக்ரைன் தூதரகம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ரஷியாவுக்கு எதிரான போரின்போது, 2025-ஆம் ஆண்டில் ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய வீரர்கள் உக்ரைனால் சிறைபிடிக்கப்பட்டனர்.
2024ல் வட கொரியா ரஷியாவுக்கு ஆதரவாக போரில் இறங்கியபின் உயிருடன் பிடிக்கப்பட்ட முதல் வட கொரிய வீரர்கள் இவர்களே ஆவர்.
அவர்கள் தென் கொரியாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தென் கொரியா முயன்று வரும் வேளையில் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.