உகாண்டாவில் தொடக்கப் பள்ளி குழந்தைகள் சுற்றுலா சென்ற வாகனம் சாலையோரத்தில் உள்ள பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பலாவில் கிங் டேவிட் ஜூனியர் பள்ளி உள்ளது. இது தொடக்கப் பள்ளியாகும். இந்த பள்ளியில் உள்ள குழந்தைகளை, அங்குள்ள சிபி நீர்விழ்ச்சியை பார்ப்பதற்காக பள்ளி வாகனத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
காலை மற்றும் மாலை முழுவதும் குழந்தைகள் நீர்வீழ்ச்சியில் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைகளுடன் வாகனம் பள்ளிக்கு திரும்பியது. அப்போது வரும் வழியில், திடீரென வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். பலம் காயத்தால் துடிதுடித்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் வசித்தவர்கள், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க உதவி புரிந்தனர். இந்த விபத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி தாளாளரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.
ஆசிரியர்கள் 3 பேர் உள்பட பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
மோசமான வாகன பராமரிப்பு, அதிவேகம் மற்றும் மோசமான சாலை ஆகியவற்றால் உகாண்டாவில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் பேருந்து ஒன்று லாரியுடன் மோதிய பயங்கர விபத்தில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்கா நாட்டில் சாலை பாதுகாப்பு ரெக்கார்டு மோசமாக உள்ளது. ஆண்டிற்கு மட்டும் 3 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். 1 லட்சம் மக்களுக்கு 26 பேர் என்ற அடிப்படையில் உயிரிழக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் சாலை பாதுகாப்பு ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. அங்கு வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். 1 லட்சம் பேருக்கு 9 பேர் எனக் குறைவாக உள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு மற்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளன.