உலகம்

UAE அணுமின் நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல்: இந்தியா கண்டனம்!

மேற்கு ஆசிய மோதலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

மேற்கு ஆசிய மோதலால் பலதரப்பட்ட அபாயகரமான பதற்றம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் உலக நாடுகளுக்கிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடா நாடுகளில் உள்ள ஒரே அணுமின் நிலையமான பரக்கா அணுமின் நிலையம், தென் கொரியாவின் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தால் கட்டப்பட்டு, 2020-ல் செயல்பாட்டிற்கு வந்தது. இது துபாயைத் தன்னகத்தே கொண்ட ஏழு ஷேக் ஆட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆற்றல் தேவைகளில் கால் பகுதியை வழங்கும் திறன் கொண்டது.

இந்த அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு ஜெனரேட்டரை ஆளில்லா விமானம் தாக்கியதில், அந்த வளாகத்தின் சுற்றுவட்டாரத்தில் தீப்பிடித்தது.

இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக யுஏஇ-யின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

"இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் அபாயகரமான பதற்ற அதிகரிப்பைக் குறிக்கின்றன. நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்குத் திரும்பவும் உடனடியாக அழைப்பு விடுக்கிறோம்", இவ்வாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) தெரிவித்துள்ளது.