ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த தங்களது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ADNOC கப்பல்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். சனிக்கிழமையன்று, அரசு எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு கப்பல் நீரிணை வழியாக சென்றபோது, அதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி ஐக்கிய அரபு அமீரகம் அதனைக் கண்டித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக ADNOC தெரிவித்துள்ளது.
இரண்டு ADNOC கப்பல்கள் மீதான "பகைமையான ஈரானியத் தாக்குதல்" என குறிப்பிட்டதை ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் கண்டித்தது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர், வர்த்தக கப்பல்களை குறிவைத்தும், பொருளாதார அழுத்தம் அல்லது மிரட்டலுக்கான ஒரு கருவியாக அந்த நீர்வழியை பயன்படுத்தியும் "கடற்கொள்ளை நடவடிக்கைகளில்" ஈடுபட்டுள்ளனர் என்றும், இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் கூறியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் செய்தி நிறுவனமான WAM அல்லது வெளியுறவு அமைச்சகமோ கப்பல்கள், அவற்றின் சரக்குகள் அல்லது ஏற்படக்கூடிய சேதம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
ஈரானின் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்தோ அல்லது ஐ.ஆர்.ஜி.சி.-இடம் இருந்தோ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
மோதலுக்கு முன்பு, உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையிலான குறுகிய நீர்வழிப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.
பிப்ரவரி 28-ஆம் தேதியன்று ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய போர் வெடித்ததில் இருந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் மீண்டும் தடைபட்டு, சரக்கு கட்டணங்கள் உயர்ந்து, பாதுகாப்பு குறித்த கவலைகளையும் உருவாக்கியுள்ளது.
தெஹ்ரானின் எதிரிகளுடன் தொடர்பு கொண்டாலோ அல்லது ஈரானிய உத்தரவுகளுக்கு இணங்க தவறினாலோ, நீர்வழிப்பாதையை கடக்கும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் முன்னதாக அச்சுறுத்தியுள்ளனர்.