தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெற்ற 2-வது சம்பவம் இதுவாகும்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜம்போங்கா நகரில் உள்ள தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அடெினியோ டி ஜம்போங்கா (Ateneo de Zamboanga) பல்கலைக்கழகத்துடன் இணைந்த பள்ளியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கைத்துப்பாக்கி மற்றும் ரைஃபிளைப் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்து, வகுப்பறைக்குள் இருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
GMA News வெளியிட்ட காணொளியில், பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது மாணவர்கள் பாதுகாப்பிற்காக குனிந்து பதுங்கும் வகையிலான வகுப்பறைக்குள்ளான குழப்பமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
உயிரிழந்தவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்று காவல்துறை தெரிவித்தது. துப்பாக்கிச் சூடு நடத்திய 9-ம் வகுப்பு மாணவர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. மேலும் இருவர் காயமடைந்தனர்.
மத்திய பிலிப்பைன்ஸின் டக்லோபன் (Tacloban) நகரில் உள்ள ஒரு பொது உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முந்தைய சம்பவத்தில், பள்ளியைச் சேர்ந்த இருவர் வளாகத்திற்குள் துப்பாக்கியால் சுட்டதில் குறைந்தது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
பிலிப்பைன்ஸில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள், பின்னணி சரிபார்ப்பு மற்றும் உளவியல் பரிசோதனை உள்ளிட்டவை கடுமையானவை என்பதால், அங்கு பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. இருப்பினும், சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன.
பள்ளிகளில் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டார்.
"நமது குழந்தைகள் கல்வி கற்கவும், வளரவும், தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணவும் நாம் அவர்களை ஒப்படைக்கும் இடங்கள்தான் நமது பள்ளிகள். அவை நம் நாட்டின் மிக பாதுகாப்பான இடங்களாகவும் இருக்க வேண்டும்," என்று மார்கோஸ் அறிக்கையில் தெரிவித்தார்.