அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஈரி நகரில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டபடி ஒருவர் வீட்டிற்குள் செல்வதாக தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டின் முன் 2 பெண்கள் பிணமாக கிடந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 5 வயது சிறுவன், ஒரு வயது சிறுமியின் உடல்கள் முதல் தளத்திலும், படிக்கட்டுப் பகுதியில் 2 பெண்கள், 2 ஆண்கள் உடல்களும் கிடந்தன. அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் கர்ப்பணி ஆவார்.
போலீசார் 2-வது தளத்திற்கு சென்று பார்த்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பிணமாக கிடந்தார். அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பலியானவர்களில் 7 பேர், துப்பாக்கி சூடு நடத்திய நபரின் உறவினர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஈரி நகர காவல்துறைத் தலைவர் ரிக்லோரா கூறும்போது, எனது 28 ஆண்டுகளுக்கும் மேலான பணிக்காலத்தில் இது போன்ற ஒன்றை நான் கண்டதில்லை. ஈரி நகரம், நாம் இப்போது கண்டதைப் போன்ற உயிர் இழப்பையும் பேரழிவையும் இதற்கு முன் கண்டதில்லை என்றார்.