நேபாளத்தில் மீண்டும் ஏற்பட்ட பனிச்சரிவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இதுதவிர மழை பாதிப்பால் 14 பேர் இறந்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த பேரிடரில் இதுவரை 1,451 பேர் பலியாகி இருப்பதுடன், 5,745 பேர் மாய மானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்ட சேதங்கள் இன்னும் சீரமைக்கப்படாத சோகநிலை தொடர்கிறது.
இந்தநிலையில், அங்கு மீண்டும் ஒரு பனிச்சரிவு ஏற்பட்டு கலங்க வைத்துள்ளது. மத்திய-வடக்கு மலைப்பகுதியில் உள்ள மனாங் மாவட்டத்தின் நார்-பூ பகுதியிலுள்ள ஹிம்லங் ஹிமால் சிகரத்தின் அடிவார முகாமில் நேற்று முன்தினம் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இது ஆகஸ்டில் வெள்ளம் பாதித்த இடத்திலிருந்து சுமார் 150 முதல் 200 கி.மீ. தொலைவில், அமைந்துள்ள வேறுமலைப் பிராந்தியமாகும்.
இந்த பனிச்சரிவில் 7 ஆயிரத்து 126 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் மலையேற்ற பருவத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் உதவியாளர்கள் குழுவினர் சிக்கிக் கொண்டார்கள்.
அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களுடன் பனியில் புதைந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக 22 பேர் தொடர்பு துண்டித்த நிலையில் மாயமானார்கள். பின்னர் 10 பேருடன் தொடர்பு ஏற்பட்டது. மற்றவர்களை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதலில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
நேற்று மேலும் 2 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
உயிரிழந்தவர்கள் சேபி பூட்டே, பசாங் பூட்டே, பிரேந்திர குருங்கன்ஷ்யாம் ராய் என அடையாளம் காணப்பட்டனர்.
இன்னும் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும்பணி தொடர்கிறது. 14 பேர் கொண்ட மீட்புக் குழு ஹெலிகாப்டர் மூலம் மலையேற்ற முகாம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
தொடர்ந்து பெய்யும் மழை, பனிப்பொழிவு மற்றும் கடினமான மலைச் சூழல் மீட்புப் பணியை பாதித் துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மழையும் நேபாளத்தை உலுக்கி வருகிறது. கடந்த 24 முதல் 27-ந்தேதி வரை பெய்த கனமழையால் நேபாளத்தின் பல பகுதிகளில் புதிய வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதில் 14 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 11 பேர் மாயமாகி உள்ளனர்.