உலகம்

ஹவுதி தாக்குதல்: சவுதிக்கு உதவிக்கரம் நீட்ட துருக்கி முடிவு- காரணம் என்ன?

மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி உதவ தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று ஹவுதிகள் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலை அடுத்து, மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் சவுதிக்கு ராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான பால்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுதிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை சமாளிக்க முடியாமல் சவுதி அரேபியா திணறி வருகிறது.

சவுதி அரேபியா திணறல்

மேலும் சவுதி அரேபியாவுக்கு எந்தவொரு நாடும் போர் நடவடிக்கைகளில் ஆதரவளிக்காத சூழலில், அதன் முக்கிய நகரங்கள் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றன.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஹவுதிகள் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.

சவுதி அரேபியா கண்டனம்

இதையடுத்து ஹவுதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு சவுதி அரேபியாவின் செய்தி தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சனிக்கிழமை அதிகாலையில் ஹவுதி குழுவால் ரியாத் நகரை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சவுதி அரேபியாவின் விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

பிஷா, தாயிஃப், ஃபராசான் மற்றும் யான்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹூதிகள் தாக்குதலை நடத்த முயன்றனர்.

ஆனால் அந்த தாக்குதல்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன” என்று அவர் பதிவிட்டார்.

ஹவுதி விளக்கம்

சவுதி மீதான தாக்குதல் குறித்து ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ கூறுகையில், சமீபத்திய சவுதி தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ‘மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ கீழ், சவுதி அரேபியாவிற்கு ராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி ஆதரவு

இதுகுறித்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் கூறுகையில், “சவுதி அரேபியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம். எங்கள் கூட்டணியில் ஒரு ஒப்பந்தம் உள்ளது.

அவர்களுக்கு சில ராணுவத் தேவைகள், குறிப்பாக சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருக்கலாம்.

அவற்றை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் சவுதி மற்றும் ஹவுதி, இரு தரப்பினரும் சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த மோதல் போக்கால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருவதாகவும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT