உலகம்

Tulsi Gabbard | அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா

வெள்ளை மாளிகைதான் கப்பார்ட்டை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார். தனது கணவருக்கு "மிகவும் அரிதான வகை எலும்புப் புற்றுநோய்" இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது, கப்பார்ட் தனது இந்த முடிவை அதிபர் டிரம்பிடம் தெரிவித்தார். தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தை (ODNI) அவர் வழிநடத்தும் கடைசி நாள் ஜூன் 30 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"என் கணவர் ஆபிரகாமுக்கு சமீபத்தில் மிகவும் அரிதான எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது," என்று கப்பார்ட் தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியிருந்தார். "இந்த நேரத்தில், அவருடன் இருந்து இந்த போராட்டத்தில் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்பதற்காக நான் பொது சேவையில் இருந்து விலக வேண்டும்," என்று கப்பார்ட் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், வெள்ளை மாளிகைதான் கப்பார்ட்டை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்தார்.

டொனால்டு டிரம்ப் அவரது ராஜினாமாவை உறுதிப்படுத்தினார். “துரதிர்ஷ்டவசமாக, துளசி கப்பார்ட் ஜூன் 30-ஆம் தேதி நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார். கப்பார்ட் விலகிய பிறகு, தேசிய உளவுத்துறையின் முதன்மை துணை இயக்குநர் ஆரோன் லூகாஸ், தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராகப் பணியாற்றுவார்,” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.