உலகம்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானை தாக்கிய சுனாமி அலை!

ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளது.

வட ஜப்பானில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 80 சென்டிமீட்டர் (31 அங்குலம்) உயர சுனாமி அலை ஒன்று துறைமுகத்தைத் தாக்கியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள சான்ரிகு கடற்கரைக்கு அப்பால், கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில், இன்று மாலை சுமார் 4:53 மணியளவில் (உள்ளூர் நேரம்) ரிக்டர் அளவில் 7.4 முதல் 7.5 வரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இவாடே, அமோரி மற்றும் ஹொக்கைடோ ஆகிய மாகாணங்களுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கடற்கரைப் பகுதிகளில் சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் எனவும் எச்சரித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து மாலை 5:34 மணிக்கு, இவாடே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்டிமீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு 5:32 மணிக்கு, 70 சென்டிமீட்டர் உயர அலை தாக்கியதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே மாகாணத்தில் உள்ள மற்றொரு துறைமுகத்தில் 40 சென்டிமீட்டர் (1.3 அடி) உயரத்திலான ஒரு சிறிய சுனாமியும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று இதே போன்று, வடகிழக்கு ஜப்பான் பகுதியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த சுனாமி பெரும் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.