ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, அடுத்த வாரம் சீனாவின் ஷென் சென் நகரில் நடக்கிறது.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியா அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த உச்சி மாநாட்டின்போது டிரம்ப் ஜின்பிங்புதின் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு குறித்து விவாதித்து வருவதாக சீன வெளியுறவுத்துறை அறிவித்தது.
இந்த சந்திப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பில் உள்ளதாக சீனா தெரிவித்தது.
இந்த நிலையில் டிரம்ப்-ஜின்பிங்-புதின் ஆகியோர் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப் தனது சீன பயணத்தின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷியா அதிபர் புதின் ஆகியோருடனான முத்தரப்பு சந்திப்பில் பங்கேற்பார்.
இதில் உலகில் உள்ள அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து அவர் விவாதிப்பார். அணு ஆயுதப் பெருக்கம் மிகவும் ஆபத்தானது என்று அதிபர் டிரம்ப் கருதுகிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முதன் முறையாக முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் போர், உக்ரைன் போர், வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் 3 தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.