உலகம்

தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்த டிரம்ப்.. 'ஈரான்' விவகாரத்தில் போப் லியோ மீது கடும் விமர்சனம்

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், லியோ ஒருபோதும் போப்பாண்டவர் ஆகியிருக்க மாட்டார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தின. பதிலடியாக ஈரான், அமெரிக்க ஆதரவு அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

கடந்த வாரம் தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டு பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கிடையே வார இறுதியில் வாடிகனில் மக்கள் மத்தியில் உரையாற்றிய கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பதினைந்தாம் லியோ, டிரம்ப்பை விமர்சித்தார்.

அவரது உரையில்,

"போர்கள் பிரிவினையை ஏற்படுத்தும்,நம்பிக்கை அனைவரையும் இணைக்கும். தற்பெருமை, பணம், வலிமையை வெளிக்காட்டியதுபோதும். போர்களும் போதும். உண்மையான வலிமை சேவை செய்வதே.

முட்டாள்தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வரவேண்டும். போர்களை நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம்.

மேஜைகளில் அமர்ந்து ஆயுதம், மரணங்களுக்கு திட்டமிடாமல் பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தில் ஈடுபடுங்கள்" என்று கூறினார்.

இந்நிலையில் தன்னை விமர்சித்த போப் லியோவை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பதிவில், ஒரு விசித்திரமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் படத்தில், டிரம்ப் நீண்ட அங்கியணிந்து, ஒரு நோயாளியின் மீது கை வைத்து அதிசயம் செய்வது போலக் காட்சியளிக்கிறார்.

அவருக்குப் பின்னால் அமெரிக்கக் கொடி, போர் விமானங்கள் மற்றும் தேவதூதர்கள் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இயேசு கிறிஸ்து லாசரஸை உயிர்ப்பித்த நிகழ்வை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"எனக்கு போப் பதினைந்தாம் லியோவை பிடிக்கவே இல்லை. போப்பாண்டவர் ஒரு ஆன்மீகத் தலைவரைப் போலன்றி, ஒரு இடதுசாரி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை போப்பாண்டவர் மறைமுகமாக ஆதரிக்கிறார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளில் அவர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், லியோ ஒருபோதும் போப்பாண்டவர் ஆகியிருக்க மாட்டார்.

அமெரிக்க அதிபரை எதிர்கொள்ள ஒரு அமெரிக்கரையே போப்பாண்டவர் ஆக்க வேண்டும் என்ற திருச்சபையின் தந்திரத்தால் தான் அவர் அந்தப் பதவிக்கு வந்தார்" என்று தெரிவித்துள்ளார்.