அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதும் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பார்க்கிறார். நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அவர் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட, மிகவும் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான உலகக் கோப்பையாக இது திகழ்கிறது. இறுதிப் போட்டியை அதிபர் டிரம்ப் பார்க்கிறார். அவரது வருகை இந்த போட்டிக்கு மேலும் மகுடம் சூட்டும்.
நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில் உலக கால்பந்து அமைப்பான பிபா இன்று நடத்தும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் டிரம்ப் கலந்துகொள்வார்
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதிப் போட்டியில் டிரம்ப் கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிக்கு உலக கோப்பையை வழங்குவார் என சர்வதேச கால்பந்து அமைப்பின் தலைவர் கியானி இன்பான்டினோ கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அது அப்போது உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது டிரம்ப் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
48 நாடுகள் கலந்து கொண்ட 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடந்த மாதம் 11-ந் தேதி முதல் இணைந்து நடத்தின. கால் இறுதியில் இருந்து அமெரிக்காவில் மட்டும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.