உலகம்

கூகுளுக்கு அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்மீது பதில் வரி விதிக்கப்படும் - ட்ரம்ப் மிரட்டல்

ஐரோப்பிய ஒன்றியம் 2017 முதல் கூகுளுக்கு அடிக்கடி அபராதம் விதித்து வருகிறது.

சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளுக்காக கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின்மீது மீது பதில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அபராதங்கள்மூலம் அமெரிக்க நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் கொள்ளையடிப்பதாக குறிப்பிட்டு, இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.

தங்களது டிஜிட்டல் சந்தைச் சட்டங்களை மீறியதாகக் கூறி, கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் 890 மில்லியன் யூரோ (சுமார் 1 பில்லியன் டாலர்) அபராதம் விதித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது.

இதுதொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்;

ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தனது வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது; வழக்கம் போலவே, அது சிறந்த அமெரிக்க நிறுவனங்களை நேரடியாகக் குறிவைக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு 15 பில்லியன் டாலர்கள், மெட்டாவிற்கு 3 பில்லியன் டாலர்கள், அமேசானுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு எவ்வித நியாயமான காரணமும் இன்றி அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனத்திற்கும் எவ்வித விளக்கமும் இன்றி மேலும் 1 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் மீதான மொத்த அபராதத் தொகை 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சட்டவிரோதமான மற்றும் மிகவும் பாரபட்சமான இந்த நடைமுறை, 'தூங்கும் ஜோ பைடன்' நிர்வாகத்தின் முதல் ஆண்டில் உச்சத்தை எட்டியது; ஆனால் டிரம்ப் ஆட்சியில் இது தொடராது.

அமெரிக்கா என்பது ஐரோப்பாவிற்கான ஒரு "பணப் பெட்டி" அல்ல; அதை அவ்வாறு இருக்கவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க நிறுவனங்களையும், அதன் மூலம் அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தையும் "கொள்ளையடிக்கும்" இந்த நடைமுறைக்கு எதிராக, நாங்கள் உடனடியாக '301 விசாரணை'யைத் தொடங்கவுள்ளோம்.

சட்டவிரோதமான மற்றும் அறநெறிக்கு முற்றிலும் புறம்பான இந்தச் செயலுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்; இது குறித்து நான் அவர்களுக்குத் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன்.

விதிக்கப்பட்ட அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்; அத்துடன், கூடிய விரைவில் அவர்கள் மீது கணிசமான இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து பாருங்கள்!.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதற்காக ஐரோப்பிய ஆணையம் கூகுளுக்கு அபராதம் விதித்தது?

கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி (Search engine) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் போன்றவற்றில், தனது சொந்த சேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இதன்மூலம் பிற செயலி உருவாக்குநர்கள், பயனர்களைக் குறைந்த விலையிலான மாற்றுச் சேவைகளுக்கு வழிநடத்துவதை கூகுள் தடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இந்த இரண்டு விதிமீறல்களுக்கும் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், கூகுள் தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் அளித்ததுள்ளது. இல்லையெனில் அதன் சராசரி தினசரி வருவாயில் 5 சதவீதம் வரையிலான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது.