அமெரிக்காவின் தொழில்நுட்பக் கொள்கையை மறுவடிவமைக்கும் டிரம்பின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி, 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் சகாப்தத்தைத் தொடங்கி வைத்தல்' என்ற தலைப்பில் 14434-வது நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லுக்குப் பதிலாக இனி ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ என்ற வார்த்தையை அமெரிக்கப் பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் விரைவில் கட்டாயமாக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ எஸ்டேட்டில் நன்றி தெரிவிக்கும் வார இறுதியை கழித்து வரும் டிரம்ப், தனது சமூக வலைதளமான 'ட்ரூத் சோஷியலில்' இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் ஷானன் பிரீம் ‘செயற்கை நுண்ணறிவு’ என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்தியதை விமர்சித்துள்ள டிரம்ப், பங்குச் சந்தை ஆணையத்தின் தலைவர் பால் அட்கின்ஸ் விரைவில் அந்த வார்த்தைக்குப் பதிலாக ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ என்பதைக் கட்டாயமாக்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் போலவே அவருக்கும் மொழியில் துல்லியம் இருப்பது பிடிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். முன்னதாக கடந்த அக்டோபர் 8-ஆம் தேதியும், ‘செயற்கை நுண்ணறிவு’ என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களை வெள்ளை மாளிகை எதிரிகளாகக் கருதும் என அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தொழில்நுட்பக் கொள்கையை மறுவடிவமைக்கும் டிரம்பின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி, 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் சகாப்தத்தைத் தொடங்கி வைத்தல்' என்ற தலைப்பில் 14434-வது நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சட்டத்திற்கு உட்பட்டு நிர்வாகத் துறைகள் அனைத்தும் ‘செயற்கை நுண்ணறிவு’ மற்றும் ‘ஏஐ’ ஆகிய குறிப்புகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ மற்றும் ‘எஸ்ஐ’ ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், மத்திய அரசுத் துறைகளும் அதிகாரப்பூர்வத் தொடர்புகளில் ‘எஸ்ஐ’ என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இருப்பினும், செப்டம்பர் மாத உத்தரவு நிர்வாக முகமைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பங்குச் சந்தை ஆணையம் போன்ற சுயாதீன ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்படவில்லை.
இந்தப் புதிய சொல்லாடல் கட்டாயம் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து வெள்ளை மாளிகையோ அல்லது பங்குச் சந்தை ஆணையமோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் மற்றும் பொதுத் தாக்கல்களில் இந்த விதி பொருந்துமா அல்லது எப்போது முறையான விதி அறிமுகப்படுத்தப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
நேற்று மாலை வரை பங்குச் சந்தை ஆணையம் இது தொடர்பாக எந்தவொரு முன்மொழிவு விதியையோ அல்லது பொது அறிக்கையையோ வெளியிடவில்லை. ஆணையத் தலைவர் பால் அட்கின்ஸ் இதற்கான முறையான விதிகளை உருவாக்க முற்பட்டால், பொது வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த மொழித் தேவைகளைக் கட்டாயமாக்குவதற்கு முன்பு, வழக்கமான நிர்வாக நடைமுறைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கும் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.