கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டியே டிரம்பின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின்படி, இந்த புதிய வரி விகிதங்கள் அடுத்த 30 நாட்களுக்குள் அமலுக்கு வரும்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, இந்தப் புதிய வரியானது, ஒயின், ஐஸ் ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் போன்ற கனடாவின் முக்கிய சந்தைப் பொருட்களை நேரடியாகப் பாதிக்கும்.
இருப்பினும், எரிசக்திப் பொருட்கள், பொட்டாஷ் மற்றும் ஏற்கனவே சிறப்பு வரிகள் அமலில் பொருட்களுக்கு இந்தப் புதிய 50 சதவீத வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (USMCA) கீழ் வரும் பொருட்களுக்கும் இந்தப் புதிய வரி பொருந்தும். எனவே இது கனடாவுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக டிரம்ப் விதித்த பல வரிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்த முறை நீதிமன்றங்களில் எளிதில் ரத்து செய்ய முடியாத புதிய சட்டப் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
1930 ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் 338 ஆம் பிரிவு எனப்படும், அரிதாகப் பயன்படுத்தப்படும் சட்ட வழிமுறையைப் பயன்படுத்தி டிரம்ப் இந்தப் புதிய வரியை விதித்துள்ளார்.
டிரம்ப் தொடர்ந்து வரிகளை விதித்து வந்தாலும், இதற்கு முன்னர் வட அமெரிக்க ஒப்பந்தங்களின் கீழ் வரும் பொருட்களுக்கு அவர் விலக்கு அளித்திருந்தார்.
ஆனால் இந்த முறை, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியான கனடாவிற்கு எதிராக கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் பெரும்பாலான மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களைப் புறக்கணித்து, அவற்றை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளன.
கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவின் இந்த நடவடிக்கை அமைந்தது. இந்த சூழலில் இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
"கனடா தனது சந்தையிலிருந்து அமெரிக்க மதுபானங்களை விலக்கியுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது, மேலும் அமெரிக்காவிலிருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரம்புகளை விதித்துள்ளது" என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்தார்.
கனடாவின் இந்த பாகுபாட்டிற்குப் பதிலடியாகவே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேபோல சில நாட்களுக்கு முன்பு, கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து பரவிய புகை அமெரிக்காவிற்கும் பரவியதால், கனடா மீது வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தினார். இந்த சூழலில் புதிய வரியானது விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் அறிவிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை USMCA வர்த்தக ஒப்பந்தத்தின் நேரடி மீறல் என்று குற்றம் சாட்டினார்.
இருப்பினும், சர்ச்சைகளைத் தீர்க்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கனடா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.