உலகம்

ஈரானின் அணுசக்தியை பறித்துவிட்டதாக டிரம்ப் அறிவிப்பு

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானிய எண்ணெய் அமைச்சர் "திடீரென்று ராஜினாமா செய்துவிட்டார்" என்று தெரிவித்தார்.

ஈரானுடனான போர் "மிக விரைவாக" முடிவுக்கு வரும் என்றும், எண்ணெய் விலைகள் "கடுமையாக வீழ்ச்சியடையும்" என்றும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கா ஈரானின் அணுசக்தியை பறித்துவிட்டது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

"நாம் செய்ய வேண்டியதை வைத்து பார்க்கும்போது இது ஒரு போர். ஈரானிடம் இருந்து அணு ஆயுதங்களை நாம் அகற்ற வேண்டும். நாம் அவர்களின் அணுசக்தியை பறித்துவிட்டோம்.

அவர்களிடம் அணுசக்தி இருந்திருந்தால், இதற்கு முன் நீங்கள் சந்தித்திராத பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள்," என்று சான் அன்டோனியோவில் நடைபெற இருந்த குடியரசு கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக வாஷிங்டனில் இருந்து புறப்பட்டபோது டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

"தற்போது அவர்களின் நாடு முழுவதும் அழிந்துவிட்டது. இது மிக விரைவில் முடிந்துவிடும், அப்படி நடக்கும்போது எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஈரான் மறுப்பு:

இதற்கிடையில், அமெரிக்க போரின் அழுத்தத்தால் ஈரானின் எண்ணெய் அமைச்சர் ராஜினாமா செய்தார் என்ற டிரம்பின் கூற்றை, "தனது சொந்தத் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு பயனற்ற முயற்சி" என்று விவரித்த ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி நிராகரித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

எண்ணெய் அமைச்சரின் ராஜினாமா "பலவீனத்தின் அடையாளம் அல்ல", மாறாக ஒரு நிலையான அரசியல் அமைப்புக்குள் காணப்படும் நெகிழ்வுத்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று செய்தித் தொடர்பாளர் மொஹஜெரானி கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானிய எண்ணெய் அமைச்சர் "திடீரென்று ராஜினாமா செய்துவிட்டார்" என்றும், அந்த அதிகாரி தன்னிடம், "எங்களுக்குப் பொருளாதாரம் இல்லை, எண்ணெய் இல்லை, எதுவுமே இல்லை" என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

திட்டத்தை நிராகரித்த டிரம்ப்:

இதற்கிடையில், ஈரான் தன்னை தற்காத்து கொள்வதில் உறுதியாக இருந்தாலும், நாட்டின் நலன்களையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய ராஜதந்திரத்தை பயன்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகளுடனான ஒரு சந்திப்பில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொது சபையில் கலந்துகொண்ட ஈரானிய தூதுக்குழு, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஏழு நாள் சமாதான திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க இந்தப் பயணத்தை பயன்படுத்திக்கொண்டதாக அராக்சி கூறினார் என, அவரது டெலிகிராம் சேனலை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் ஈரானின் இந்தத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட மறுநாளே டிரம்ப் அதை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில் அமெரிக்க அதிகாரிகள் ஒரு மாற்றுத் திட்டத்தை வெளியிட்டனர்.

SCROLL FOR NEXT