ஹார்முஸ் ஜலசந்தி- டிரம்ப்
உலகம்

அமெரிக்காதான் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன்: பாதுகாப்பான பயணத்திற்கு 20% கட்டணம்- டிரம்ப் அதிரடி

ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்க ஈரான் தங்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில், டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், ஈரானில் இருந்து வெளியே செல்லும் மற்றும் ஈரானுக்கு செல்லும் கப்பல்களை அமெரிக்கா முற்றுகையிட்டது. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் 60 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.

சுமார் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தின. இதனால் போர் நிறுத்தம் முடிந்ததாக இரண்டு நாடுகளும் அறிவித்தன.

அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன்

தற்போது ஹார்முஸ் ஜலந்தியை நிர்வகிப்பது யார்? என்பதில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கும் உரிமை எங்களுக்குதான் உள்ளது என்று ஈரான் தெரிவித்து வருகிறது. அதேவேளையில் நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு வருகிறோம். அனைத்து விஷயங்களிலும் உடன்பாடு எட்டப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டிரம்ப் ட்ரூம் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இனிவரும் காலங்களில், அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் (Guardian of the Hormuz Strait) என்று அழைக்கப்படும். அதேவேளையில், நியாயமான நடைமுறையின் அடிப்படையில் உலகின் மிகவும் பதற்றமான இப்பகுதிக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிக்காக ஆகும் அனைத்து செலவுகளும் ஈடுசெய்யப்படும். இதற்காக, இப்பகுதி வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20% கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான செயல்முறைகளும் ஏற்பாடுகளும் உடனடியாகத் தொடங்கப்படும்.

ஈரான் கப்பல்கள் முற்றுகை

ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கிறது. மேலும் அது திறந்தே இருக்கும். நாங்கள் ஈரானிய முற்றுகையை மீண்டும் அமல்படுத்துகிறோம். ஈரானின் கப்பல்கள் அல்லது வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ மட்டும் இது தடுப்பதால், இதற்கு இப்பெயர் வந்தது. மற்ற அனைத்து நாடுகளும் இந்த ஜலசந்தியை நியாயமாகவும் தடையின்றியும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் அறிவிப்பு குறித்து ஈரான் உடனடி எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை. ஈரானும் உரிமை கொண்டாடுவதால் பதற்றமான நிலையில் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முன்வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.