அணுசக்தி விவகாரத்தில் ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. சுமார் 40 நாட்கள் நடந்த இப்போரில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. இதில் ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவரங்களில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே தற்காப்பு நடவடிக்கை எனக்கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி தாக்குதல் கொடுத்தது. இதனால் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்த நிலையில் அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதேபோல் ஈரானும் ஒப்பந்தம் ஏற்படுவது மிக நெருக்கத்தில் உள்ளதாக தெரிவித்தது.
இதற்கிடையே, ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் என்பது அந்த நாடு அணு ஆயுதத்தை அடைவதற்கான ஒரு எளிதான, அழகான மற்றும் தடையற்ற பாதையாக இருந்தது. அந்த ஒப்பந்தம் தொடர்ந்திருந்தால், ஈரான் 6 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தை தயாரித்திருக்கும்.
இந்நேரத்திற்குள் அதை பயன்படுத்தியும் இருக்கும். ஆனால் இதற்கு நேர்மாறானது ஈரானுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தம்.
இது அணு ஆயுதங்கள் உருவாவதைத் தடுக்கும் ஓர் உறுதியான ஒப்பந்தம் ஆகும். எந்த வகையிலும் ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெறப்போவதில்லை.
இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. கையெழுத்தான உடனேயே ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறந்து விடப்படும். முந்தைய அமெரிக்க அரசு நிர்வாகங்கள் ஈரானுடன் கொண்டிருந்த உறவைவிட, அந்த நாட்டுடனான எங்கள் உறவு மிகவும் மாறுபட்டதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. ஒபாமா ஈரானுக்கு வழங்கிய பல நூறு பில்லியன் டாலர்கள் போல் இல்லாமல் இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பணப் பரிமாற்றமும் இருக்காது.
ஈரானில் கிரானைட் மலைகளுக்கு அடியில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ள அணுசக்திப் பொருட்களை (யுரேனியம்) நாங்கள் அங்கு சென்று எடுப்போம். பின்னர் ஈரான் அல்லது அமெரிக்கா என எங்கு வேண்டுமானாலும் வைத்து, அந்த அணுசக்தி பொருட்களின் வீரியத்தைக் குறைத்து அழித்துவிடுவோம். எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு ஈரானுடனும், ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பகுதியுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலாக உள்ளோம்.
இந்தச் செயல்முறை விரைவாகவும், எளிதாகவும், சுமூகமாகவும் அமையும் என்று நம்புகிறோம். ஒருவேளை அப்படி அமையா விட்டால், எங்களிடம் மிக இறுதியான மாற்று வழி ஒன்று உள்ளது. ஆனால் அதை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டிய நிலை வராது என்று நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வரைவில் உடன்பாடு ஏற்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ள போதிலும், ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்பதை ஈரான் இன்னும் உறுதிபடுத்தவில்லை.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறுகையில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான தேதி குறித்து நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வு இன்று நடைபெறாது என தெரிவித்தார்.
அதேபோல், ஈரான் புரட்சிகர காவல்படை கூறும்போது, ஒப்பந்தம் கையெழுத்துக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெறலாம் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கா-ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான், அமைதி ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்தாக உள்ளது என தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜெனீவாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியான நிலையில் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொளி வாயிலாக கையெழுத்தாகும் என்று டிரம்பும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க தரப்பில் கூறும்போது, அமெரிக்கா-ஈரான் குழுவினர் நேரில் சந்திப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக காணொளி வாயிலாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.