ஈரான் போரினால் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் முடியும் வரை குறைய வாய்ப்பில்லை என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், இன்று கச்சா எண்ணெய் விலைகள் 3%-க்கும் அதிகமாக உயர்ந்தன; இதனால் ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 100 டாலர் என்ற அளவைத் தாண்டியது.
இடைக்காலத் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க டல்லாஸ் நகருக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவில் அந்த முக்கியமான தேர்தல்கள் முடிந்த பிறகு ஈரான் இறுதியில் பணிந்துபோகும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார்.
"தேர்தல் முடிந்த உடனேயே இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்; ஏனெனில் அவர்களால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது," என்று டிரம்ப் கூறினார்.
இந்தப் போர் தொடங்கியபோது, இது சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அதிபர் கூறியிருந்தார். ஆனால், தற்போது இந்தப் போர் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்க ராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியது. இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான செபா நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தது. மேலும் ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த MQ-9 ரீப்பர் டிரோன் ஒன்றை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தது.