அணு ஆயுத போட்டி காரணமாக தொடங்கிய ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றன. இதனால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தரான பாகிஸ்தானிடம் இருந்து பெற்ற அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிவை ஆராய்ந்து வருவதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளின் "இறுதிக் கட்டத்தில்" வாஷிங்டன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து இது நிகழ்ந்தது.
"ஒன்று நாம் ஒரு உடன்பாட்டிற்கு வருவோம் அல்லது சற்று விரும்பத்தகாத சில காரியங்களைச் செய்வோம். ஆனால், அப்படி நடக்காது என்று நம்புகிறேன். எனக்கு எந்த அவசரமும் இல்லை. அதிகமானோர் கொல்லப்படுவதை விட, குறைவானவர்களே கொல்லப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்," என்று டிரம்ப் கூறினார்.
"அமெரிக்க தரப்பின் கருத்துக்களை இஸ்லாமியக் குடியரசு பெற்றுள்ளது, நாங்கள் தற்போது அவற்றை ஆராய்ந்து வருகிறோம்" என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார்.
வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட ஈரானின் கோரிக்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
முன்னதாக, தெஹ்ரான் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவேன் என்று டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு போரை மீண்டும் தொடங்க அமெரிக்கா விரும்புவதாக தெஹ்ரான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் தலைமை அதிகாரியான முகமது பாகர் காலிபாஃப் கூறியிருந்தார்.