உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி ”டிரம்ப் ஜலசந்தி” என அறிவிப்பு - ஈரான் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில், ஈரான் அதிபர் போர் நிறுத்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.

ஈரான் நாட்டின் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்து விட்டதாகவும், அமெரிக்காவில் நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு பிறகு, ஈரான் மீது தாக்குதலை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனும் ஜூன் 17 அன்று 14 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம், லெபனான் உட்பட அனைத்து இடங்களிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு வழிவகை செய்ததுடன், 60 நாட்களுக்குள் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளையும் உறுதிப்படுத்தியது.

இருப்பினும், ஜூலை 8 அன்று டிரம்ப் அந்த ஒப்பந்தம் "முடிந்துவிட்டது" என்று கூறினார்.

ஒரு வாரம் கழித்து, அமெரிக்கா, தனது அனைத்து வாக்குறுதிகளையும் மீறிவிட்டது என்று குற்றம் சாட்டி, ஈரானும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது.

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கி, எண்ணெய் மீதான தடைகளை தளர்த்தி, லெபனானை உள்ளடக்கிய போர் நிறுத்தத்தை கடைபிடித்தால், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை 7 நாட்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 81வது ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அதிபர் போர் நிறுத்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்ததை ஏற்கும் நாளில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர்

இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கத்தார் வழியாக, அமெரிக்காவிற்கு ஒரு உறுதியான ஏழு நாள் திட்டத்தை ஈரான் தெரிவித்துள்ளது.

தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஏழு நாட்களுக்குள் ஜலசந்தியை மீண்டும் திறந்து, இயல்பான கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

மேலும் அவர், இப்போது முடிவெடுக்கும் பொறுப்பு அமெரிக்காவிடம் உள்ளது. நிர்ப்பந்தம், அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களை ஈரான் ஏற்காது, மேலும் அழுத்தத்தின் காரணமாக தனது இறையாண்மை உரிமைகளை ஈரான் விட்டுக்கொடுக்காது, என்றும் கூறினார்.

டிரம்ப் நிராகரிப்பு

இந்த நிலையில் ஈரான் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ஈரான் தனது கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்பதில் டிரம்பிற்கு சந்தேகம் உள்ளதாகவும், ஈரான் மீண்டும் தாக்குதல்களை தொடங்க வாய்ப்பிருப்பதாக தான் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் ஜலசந்தி

இதையடுத்து அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை வட்டமிட்டு ‘டிரம்ப் ஜலசந்தி’ எனப் பெயரிடப்பட்ட ஒரு வரைபடத்தை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT