இடைகால தேர்தலில் குடியரசு கட்சி வென்றால் நாட்டின் வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் 5,000 டாலர் வழங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வரும் 2026 நவம்பர் 3 அன்று, அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து 50 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே.
எனவே, அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.
டிரம்ப் குடியரசு கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கிறதா அல்லது எதிர்க்கட்சிக்கு கிடைக்கிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.
அமெரிக்கவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சபையின் மொத்தம் 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அமெரிக்காவின் 39 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது.
ஆளும் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தால், டிரம்ப் தனது மீதமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வருவதிலும், திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் பெறுவதிலும் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைகால தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனேட் ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்து கொண்டால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.
டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தத் தொகையை "Trump Dividend" என்று குறிப்பிட்டார்.
"குடியரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு 5,000 டாலர் கிடைக்கும்" என்று டிரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த இடைகால தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் இடத்தில் தனது பெயர் இருப்பதைப்போல கருதி குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள சுமார் 24.5 கோடி வயது வந்த குடிமக்களுக்கு தலா 5,000 டாலர் வழங்க வேண்டுமானால், அதற்குச் சுமார் 1 டிரில்லியன் டாலர் நிதி தேவைப்படும்.
தனது நிர்வாகம் விதித்துள்ள இறக்குமதி வரிகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலமாகவே இது சாத்தியப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் மற்றும் ஈரான் உடனான போர் காரணமாக மக்களிடையே டிரம்ப் மீது அதிருப்தி நிலவுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் நாட்டில் டிரம்பை ஆதரிப்போம் எண்ணிக்கை 30% ஆக சரிந்துள்ளது.
எதிர் தரப்பில் உள்ள ஜனநாயக கட்சியினர் இந்த அறிவிப்பை தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் டிரம்ப் அளித்துள்ள நம்பகத்தன்மையற்ற வாக்குறுதி என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்புதல் அவசியமாகும். எனினும், நாட்டின் கடன் 40 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ள நிலையில் இது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனது உரையின் போது ஈரான் மீதான போரைப் பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு மிக அருகில் சென்றுவிட்டதாலேயே ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டது என்றும் இந்த பிரச்சனை இடைத்தேர்தலுக்கு பின் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் விலைகள் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்திக்கு தனது பெயரை சூட்டப் போவதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.