உலகம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வட்டி விகிதம் உயர்வு

அமெரிக்க பொருளாதாரம் வலுவான நிதிச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் போதெல்லாம், மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துகிறது. இந்த நடவடிக்கை நாட்டை அழித்து வருகிறது. நான் வங்கித் தலைவரை குறை சொல்லவில்லை.

ஆனால் அந்த அமைப்பே அரசியல் ரீதியாகச் செயல்படுகிறது. சாதகமான பொருளாதாரத் தரவுகள் வெளியிடப்படும்போது, அதன் வேகத்தைக் குறைப்பதற்காகக் கொள்கை வகுப்பாளர்கள் வேண்டுமென்றே வட்டி விகிதங்களை உயர்த்துகிறார்கள்.

உலகில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்க வேண்டும். கடன் செலவுகளைக் குறைப்பதன் மூலம் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதைய வளர்ச்சியைவிடப் பல மடங்கு அதிகரிக்கும். ​​

கடுமையான கொள்கைகளை அமல்படுத்துவதற்குப் பதிலாக மலிவான கடன் வசதிகள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தி

இந்தியாவை பாருங்கள். அங்கு வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன. இந்தியாவில் 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் உள்ளது. வட்டி விகிதத்தை குறைத்தால் நாமும் 14 முதல் 20 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்ட முடியும்.

நாம் மிக சிறப்பாக செயல்படும்போது ​வட்டி விகிதங்களை உயர்த்துவது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

மத்திய வங்கி இப்படி செயல்பட்ட போதிலும் எனது வரி விதிப்புக் கொள்கைகள் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

மேலும், அதிக கடன் வாங்கும் செலவுகள் இருந்த போதிலும், அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வட்டி உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT