ஈரான் மீது நடத்த் திட்டமிடப்பட்டிருந்த ராணுவ் தாக்குதலை ஒத்திவைப்பதாக அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்தார். "தீவிர பேச்சுவார்த்தைகள்" நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலவீனமான போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது, இல்லையெனில் சண்டை மீண்டும் தொடங்கும் என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்த விவரங்களை அதிபர் டிரம்ப் தெரிவிக்கவில்லை, ஆனால் "ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில், ஈரான் மீது ஒரு முழுமையான, பெரிய அளவிலான தாக்குதலை உடனடியாக தொடுக்க தயாராக இருக்குமாறு" அமெரிக்க ராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக கூறினார்.
இன்று (மே 19) தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் இதற்கு முன்பு வெளியிடவில்லை, ஆனால் வார இறுதியில் அவர், "ஈரானுக்கு நேரம் விரைந்து கொண்டிருக்கிறது, அவர்கள் மிக வேகமாக செயல்பட தொடங்க வேண்டும், இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது" என்று எச்சரித்து இருந்தார்.
அத்தகைய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான மாறிவரும் வரையறைகளுடன், ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டாவிட்டால், ஏப்ரல் மாத மத்தியில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வரக்கூடும் என்று டிரம்ப் பல வாரங்களாக அச்சுறுத்தி வருகிறார்.
கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உட்பட மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்ட தாக்குதலை ரத்து செய்வதாக டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்தார்.
டிரம்ப் தெஹ்ரானுக்கு மீண்டும் மீண்டும் காலக்கெடு விதித்துவிட்டு, பின்னர் அதில் இருந்து பின்வாங்கியுள்ளார். டிரம்ப் சமீப நாட்களில் ஈரான் போர் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடனும் பேசியுள்ளார்.