அமெரிக்காவின் 250-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், அதிபர் டொனால்டு டிரம்ப் புகைப்படம் இடம்பெற்ற 'லிமிட்டெட் எடிஷன்' (limited-edition) பாஸ்போர்ட்களை, தலைநகருக்கு வெளியே வசிக்கும் அமெரிக்கர்களும் விரைவில் பெற முடியும் என்று வெளியுறவு துறை அறிவித்தது.
நாடு முழுவதும் உள்ள அந்த துறையின் 27 பாஸ்போர்ட் அலுவலகங்கள் அடுத்த மாதம் முதல் இந்த சிறப்பு பயண ஆவணங்களை வழங்க தொடங்கும். முன்னதாக, இவை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்தன.
உள் பக்கத்தில் அவரது கம்பீரமான உருவப்படம் அச்சிடப்பட்டுள்ள, இந்த பயண ஆவணத்தில் இடம்பெற்ற முதல் உயிருள்ள அதிபர் டிரம்ப் ஆவார்.
கட்டிடங்கள், ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய அடையாளங்களில் தனது பெயரையும் உருவத்தையும் டிரம்ப் இணைத்துக்கொள்வதன் சமீபத்திய உதாரணமாக இந்த பாஸ்போர்ட்கள் அமைந்துள்ளன. நாட்டின் உருவாக்கத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்க மின்ட் (US Mint) தயாரித்து வரும் தங்க முலாம் பூசப்பட்ட நினைவு நாணயத்திலும் அவரது உருவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், பதவியில் இருக்கும் அதிபர் ஒருவரின் கையொப்பத்தை அனைத்து புதிய அமெரிக்க காகித நாணயங்களிலும் இடம்பெற செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
"அதிகரித்து வரும் தேவையை முன்னிட்டு, வெளியுறவுத் துறை கூடுதலாக 2,50,000 சிறப்பு நினைவு பாஸ்போர்ட்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்குகிறது. 'பேட்ரியாட் பாஸ்போர்ட்' (Patriot Passport) என்று அழைக்கப்படும் இந்த கூடுதல் சிறப்பு பாஸ்போர்ட்களுக்கு, நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்," என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்டெனியல், சிகாகோ, டல்லாஸ், டெட்ராய்ட், நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க் மற்றும் ஸ்டாம்போர்ட் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், ஆகஸ்ட் 8 முதல் நடைபெறும் ஒரு நாள் சிறப்பு நிகழ்வுகளில் இந்த டிரம்ப் பாஸ்போர்ட்களை வழங்கும். ஆகஸ்ட் மாதம் முழுவதும் பிற பாஸ்போர்ட் அலுவலகங்களும் இந்த சேவையில் இணைக்கப்படும்.
இந்த சிறப்பு பாஸ்போர்ட்டை விரும்புவோர், துறையின் பாஸ்போர்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வழக்கமான பாஸ்போர்ட்டை விரும்புவோர் வேறு நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நினைவு பாஸ்போர்ட்டின் உட்புறப் பக்கத்தில், டிரம்பின் கையொப்பம் தங்க நிறத்தில் அச்சிடப்பட்டிருக்க, அதற்கு மேல் அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் அட்டைப் பகுதியில், தற்போதைய நிலையான வடிவமைப்பிற்கு மாறாக, மேல் பகுதியில் தடித்த தங்க நிற எழுத்துக்களில் "United States of America" என்றும், கீழ் பகுதியில் "Passport" என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், பின் பக்க அட்டையின் அடிப்பகுதியில், நட்சத்திரங்களால் சூழப்பட்ட '250' என்ற எண்ணுடன் கூடிய சிறிய தங்க நிற அமெரிக்க கொடி முத்திரை இடம்பெற்றுள்ளது. தற்போதைய அமெரிக்க பாஸ்போர்ட்களில், தெற்கு டகோட்டாவில் உள்ள ரஷ்மோர் மலையின் இருபக்க சித்திரத்தில் மட்டுமே ஜனாதிபதிகள் இடம்பெற்றுள்ளனர் - ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆபிரகாம் லிங்கன்.
மற்ற சித்திரங்களில் சுதந்திர தேவி சிலை, பிலடெல்பியாவில் உள்ள லிபர்ட்டி பெல் மற்றும் இன்டிபென்டன்ஸ் ஹால், மற்றும் பெரும் சமவெளிகள், மலைகள் மற்றும் தீவுகளின் காட்சிகள் ஆகியவை அடங்கும். தற்போதைய பாஸ்போர்ட்களில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் ஜனாதிபதிகள் வாஷிங்டன், ஜெபர்சன், ரூஸ்வெல்ட், ஜான் எஃப். கென்னடி மற்றும் டுவைட் ஐசன்ஹோவர் ஆகியோரின் மேற்கோள்களும் உள்ளன.