உலகம்

கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்

80 வயதான டிரம்ப்பின் உடல்நலக் கோளாறுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் பற்றி ஏற்கனவே பேசப்பட்டு வந்தன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை உருவ கேலி செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ராய்ட்டர்ஸ் செய்தியாளரை உருவ கேலி செய்து விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார்.

நவம்பர் 3 அன்று அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தனது குடியரசு கட்சிக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் கான்சாஸ் மாகாணத்தில் வரும் வார இறுதியில் நடைபெற இருந்த பிரசாரங்களை அவர் ரத்து செய்துவிட்டார். தொடர் பிரசாரங்களால் அவர் சோர்வடைந்துள்ளதாவும், அவரது உடல்நலன் குறித்தும் கேள்விகள் எழுந்தன.

80 வயதான டிரம்ப்பின் உடல்நலக் கோளாறுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் பற்றி ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் இந்த பிரசார அலுப்பும் அவருக்கு சவாலாக அமைந்ததாக கூறப்படுகிறது.

கேள்வி

இதன் பின்னணியில் தென் கரோலினாவில் பிரச்சாம் முடித்து விமானம் ஏறும்போது டிரம்ப் இடம் பேட்டி கண்ட ராய்ட்டர்ஸின் வெள்ளை மாளிகை செய்தியாளர் ஜேக்கப் போகெஸ், அவரது உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பினார். "பயணம் செய்து சோர்வடைந்ததால் கன்சாஸ் பேரணியை ரத்து செய்தீர்களா?" என்று அந்த செய்தியாளர் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் அந்த பத்திரிகையாளரை உருவ கேலி செய்யும் விதமாக மோசமான முறையில் பேசியுள்ளார்.

உருவ கேலி

டிரம்ப் அவரை நோக்கி, " "இந்தக் கேள்வியைக் கேட்க நீங்கள் நிச்சயம் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு நோயாளி. நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்?" என்று கேள்வி எழுப்பினார்.

அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் என்று தெரிந்ததும் "ராய்ட்டர்ஸ் ஒரு மோசமான நிறுவனம். இவரை பாருங்கள். இவருடைய உடல்வாகு படுமோசம்." என்றார்.

அந்த செய்தியாளர் தான் டிரம்ப் உடைய உடல் நலனில் அக்கறை கொண்டே அவ்வாறு பேசியதாக கூறியபோதும் ஆத்திரம் அடங்காத டிரம்ப், "நீங்கள் 2 வாரங்களாக என்னை பின்தொடர்கிறீர்கள், நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். நீங்கள் அருவருப்பானவர்.

முதலில் உங்கள் உடலைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். (You are disgusting. Put yourself in shape. You look like hell)" என்று காட்டமாக தெரிவித்தார்.

மேலும் கான்சாஸ் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதற்கு விளக்கம் அளித்த அவர், அங்கு செல்லாமலேயே வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

இடைகால தேர்தல்

வரும் 2026 நவம்பர் 3 அன்று, அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து 50 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே.

எனவே, அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.

டிரம்ப் குடியரசு கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கிறதா அல்லது எதிர்க்கட்சிக்கு கிடைக்கிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.

அமெரிக்கவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சபையின் மொத்தம் 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அமெரிக்காவின் 39 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது.

ஆளும் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தால், டிரம்ப் தனது மீதமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வருவதிலும், திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் பெறுவதிலும் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும்.

SCROLL FOR NEXT